நம்முடைய வாழ்க்கையில் நாம் உயர்வை விரும்புவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்கு முன்பாக என்ன தேவை? அதை நாம் கொண்டிராமல் உயர்த்தப்படுவதை விரும்புவது தவறாகும். நம்முடைய வாழ்க்கையில் நாம் உயர்த்தப்படுவது என்பது தேவன் செய்கிற காரியம். நம்மை நாமே உயர்த்திக் கொள்ள ஆசைப்படும் பொழுது நாம் தாழ்த்தப்பட்டுவிடுவோம். இந்த ஆயக்காரன் ஆண்டவரிடத்தில் தன்னைத் தாழ்த்தினான். ‘தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்றான். அவன்: நான் எந்தவிதமான நன்மைக்கும் பாத்திரன் அல்ல. எந்த தகுதியும் இல்லாத என் பேரில் உம்முடைய கிருபையைக் காண்பியும் என்று கெஞ்சினான்.

நம்முடைய ஜெபம் எப்பொழுதும் நம்முடைய தகுதியின் அடிப்படையிலான விதத்தில் காணப்படக் கூடாது. தாழ்மையோடு தகுதியில்லாத நமக்கு ஆண்டவர் மாத்திரமே இரங்க வேண்டும் என்ற உணர்வோடு நம்மைத் தாழ்த்துவது அவசியம். அவன் நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டுக்கு திரும்பிப்போனான்.     நம் வாழ்க்கையில் எந்தவிதமான ஆசீர்வாதத்தோடு தேவனுடைய சமூகத்திலிருந்து நாம் திரும்பிப் போக விரும்புகிறோம்? அநேகர் தேவனுடைய சமுகத்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வந்த வண்ணமாகவே திரும்பிப் போகிறார்கள். பரிசேயன் தான் இருந்த வண்ணமாகவே திரும்பிப் போனான். எந்த ஒரு ஆவிக்குரிய நன்மையையும் பெறாமல் திரும்பிப் போனான்.

அநேகர் தேவசமுகத்திற்கு வருகிறார்கள், ஜெபிக்கிறார்கள். ஆனாலும் எந்த நன்மையும் இல்லாமல் அதே நிலையில் திரும்பிப் போகிறார்கள். அவ்விதமான நிலை நம் வாழ்க்கையில் இருக்குமானால் அது எவ்வளவு மிகுந்த வருத்தத்திற்குரியது. ஆண்டவரிடத்தில் நாம் ஆசீர்வாதத்தைப் பெற்று வாழ விரும்புகிறோம். அது நல்ல ஒரு வாஞ்சை. ஆனால் அதே சமயத்தில் நாம் நம்முடைய குற்றங்கள் குறைகளை உணர்ந்து தேவனிடத்தில் மனந்திரும்ப மறுக்கிறோம். நாம் தகுதியற்றவர்கள் என்ற உணர்வோடு கிருபையை மாத்திரமே சார்ந்து வாழப் பழகுவோமாக. நிச்சயமாக இந்த ஆயக்காரனைப் போல நாமும் தேவனுடைய ஆசீர்வாதத்தோடு திரும்பிப்போகிறவர்களாகக் காணப்படுவோம்.