பிப்ரவரி 4

“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1கொரிந்தியர் 2:9).

தேவனிடத்தில் அன்புகூறுகிற ஒரு வாழ்க்கையைப் போல விலையேறப்பெற்ற பொக்கிஷம் வேறொன்றுமில்லை. நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மில் அன்புகூருகிற இந்த அன்பை எந்தளவுக்கு உணருகின்றோமோ அந்தளவுக்கு நாம் தேவனில் அன்புகூருகிறவர்களாகக் காணப்படுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இவ்விதமான அன்பைப் பெற்ற நம்முடைய வாழ்க்கையில் நமக்குக் கொடுக்கப்படுகிற சமாதானம், சந்தோஷம் ஆகியவற்றுக்கும் மேலாக கண் காணவும் கூடாத அளவிற்கு தம்முடைய மகிமையான காரியங்களை தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. என்ன ஒரு ஆச்சரியமான அன்பு இது! இது நம்முடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிதான ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் என்று சொல்வோமென்றால் நாம் இந்த அன்பின் வழியைத் தெரிந்துகொள்வதைத் தவிர வேறே மேலான ஆசீர்வாதத்தின் வழி என்னவாக இருக்க முடியும்!   ஆகவே நம்முடைய வாழ்க்கை இந்த உலகத்தின் துன்பங்கள், பாடுகள் மத்தியில் கடந்துபோனாலும் இது ஒரு குறுகிய கால வாழ்க்கையின் ஓட்டம். ஆனால் தேவன் இவை எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்ற விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை நாம் எண்ணக்கூடாத மேலான அளவில் அவர் வைத்திருப்பார் என்றால் அதைப் போல வேறொரு பொக்கிஷம் உண்டோ? அந்தப் பொக்கிஷத்தை நாம் எண்ணிபார்க்கும்போது இந்த உலகத்தில் தரித்திரர்களாய் வாழுவதும் ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் இந்த உலகத்தின் காரியங்கள் நம்மை திருப்திப்படுத்துவதில்லை, நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நம்மை இன்னுமாக துக்கப்படுத்துகிறதாகவே காணப்படுகிறது. இந்த உலகத்தின் ஐஸ்வரியம் நமக்கு நிறைவைக் கொடுப்பதில்லை. அதோடுகூட வேதனைகளும் கூட்டபட்ட பலவிதமான காரியங்களையே நாம் பார்க்கிறோம். ஆனால் தேவன் நமக்கென்று வைத்திருக்கின்ற கண்காணக்கூடாத, இருதயத்தில் தோன்றக்கூடாத விலையேறபெற்ற பொக்கிஷங்களை விலைமதிப்போம்.  அதனுடைய மேன்மையை உணர்ந்து நாம் வாழும்போது இந்த உலகத்தின் பாடுகளும் உபத்திரவங்களும் நமக்குப் பெரியவைகளாக இருக்காது. இந்த உலகத்தின் ஐஸ்வரியத்தையும் நாம் குப்பையாக எண்ணக்கூடிய அளவிலே நம்முடைய ஆவிக்குரிய நிலை காணப்படும்.