மார்ச் 17
“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு”
2 தீமோத்தேயு 4:2
நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய வசனத்தைப் போதிப்பதே பிரதானமானது. விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அந்த விதைகள் என்ன? வேதவசனங்கள். விதைப்பது நம்முடைய கடமை. விளையச் செய்வதோ தேவன் செய்கிறார். இன்றைக்கு அநேகர் விதைகளை விதைப்பதற்கு பதிலாக களைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அநேக ஊழியர்கள் என்று சொல்லுகிறவர்கள் களைகளை விதைக்கிறார்கள். களைகள் என்பது கட்டுக்கதைகள். கட்டுக்கதைகள் ஒருக்காலும் விதைகள் ஆகாது. அவைகள் விதைகளை முளைக்கும்பொழுது அவைகளை நெருக்கிப்போடும்.
நம்முடைய வாழ்க்கையில் எதை விரும்புகிறோம்? கட்டுக்கதைகளை விரும்புகிறோமோ? அல்லது விதைகளை விரும்புகிறோமா? விதையாகிய தேவனுடைய வசனத்தை கேட்க மக்களுக்கு விருப்பமில்லை. களைகளைத் தங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் இது ஒரு காலும் பிரயோஜனமற்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் களைகளோடு நாமும் ஒருநாள் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு போய்விடுவோம்.
2 தீமோத்தேயு 4:5 -ல் “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று” என்று பவுல் சொல்லுகிறார். நம்முடைய பணி வேத சத்தியத்தை தெளிவாய் ஆராய்ந்து போதிப்பதும், அதன்படி நடப்பதே ஆகும். அந்த பணியை நாம் செய்வோம். நாம் மெய்யாலுமே கர்த்தர் நம் கரத்தில் கொடுத்திருக்கிற பணியை நிறைவேற்றவில்லையென்றால் நாம் களைகளை விதைக்கிறவர்களாக இருப்போம். மேலும் நாம் தவறான இச்சைகளுக்கு இடங்கொடுத்து, ஒழுக்கமில்லாத சந்ததி உருவாக நாம் காரணராக மாறி, ஆசீர்வாதமான சந்ததியாக இழந்து காணப்படுவோம். ஜாக்கிரதையாக நாம் வாழ்வோமாக.