“மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1கொரிந்தியர் 9:27).

பவுல் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையின் உண்மையான எச்சரிப்போடு வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருந்தார். நம்முடைய சொந்த ஆவிக்குரிய நிலையைக் குறித்து நாம் விழிப்புள்ளவர்களாய் இல்லையென்றால் நாம் செய்யும் ஊழியம், பணி எவ்விதமாக பிரயோஜனமுள்ளதாக இருக்க கூடும் என்பதை சிந்திக்க வேண்டிய ஒன்றாய் இருக்கிறது. பவுல் மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிறபொழுதும் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் காத்துக்கொள்வதில் ஜாக்கிரதையுள்ளவராக இருந்தார். “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (1 கொரிந்தியர் 9:24-25). நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளதக்கதாக ஓடுகிறோமா? ஆவிக்குரிய இலக்கைக் கொண்ட வாழ்க்கையானது மிக அவசியம். பவுல் இதைக் குறித்துச் சொல்லும்போது, “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:14). மேலும் “அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:11-12). நாம் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிராயசப்படுகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.