மே 4             

“இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி” (நெகேமியா 1:4).

நெகேமியாவின் இருதய நிலையை நாம் நோக்கி பார்க்கும்பொழுது நாம் நம்மைக் குறித்து ஆழமாகச்  சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சூசான் அரண்மனையில் சௌகரியமாக வாழ்ந்து, நெகேமியா தன்னுடைய காரியத்தில் மிகுந்த சந்தோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் ஆண்டவருடைய காரியங்களைக்  குறித்து எவ்வளவாக பாரமுள்ள மனிதனாக இருந்தான் என்பதைக் குறித்து இந்த வசனம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. நாம் இன்றைக்கு நம்மை சுற்றி இருக்கும்படியான மக்களின் அவல நிலையை எண்ணிப் பார்த்து நெகேமியாவைப் போல இருதய சிந்தை உள்ளவர்களாக இருக்கிறோமா? அவன் எருசலேமின் அலங்கம் இடிபட்ட நிலையையும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்பதையும் கேட்ட போது அவனுடைய துக்கம் மேலிட்டது. அவன் அழுது அதற்காக சில நாளாய் துக்கித்தான் என்று பார்க்கிறோம். அவனுடைய துக்கம் என்பது வெறுமையாக உணர்ச்சிபூர்வமான விதத்தில் மேலோட்டமானதாக  அல்ல. அவனுடைய துக்கம் ஆத்மாவிலிருந்து வருகிற ஒன்றாய் காணப்பட்டது. அவனுடைய துக்கமானது தேவன் பேரில் வைத்திருந்த அன்பைக்   காண்பிக்கிறது.

அவருடைய மக்கள் படுகிற பாடுகளை அவன் பார்த்த பொழுது அவனுடைய இருதயம் அதிகமாய் வேதனைப்பட்டது. அதோடு கூட அவன் நின்றுவிடவில்லை. அதற்காக அவன் தேவனை நோக்கி ஜெபித்தான். இன்றைக்கு ஆண்டவருடைய காரியமாய் ஜெபிக்கிறவர்கள் தேவை. ஆண்டவருடைய காரியமாய் பாரத்தோடு உண்மையாய் ஜெபிக்கிற மக்களை தேவன் எதிர்பார்க்கிறார். திறப்பில் நிற்கும்படி அவர்களைக்  கர்த்தர் எதிர்பார்க்கிறார். நாம் இந்த காலத்தின் கிறிஸ்தவ மக்களின் நிலை குறித்து எண்ணிப் பார்க்கும் பொழுது,  மெய்யாலும் பாரத்தோடும்  துக்கத்தோடும்  ஜெபிக்கிறவர்களாக இருக்கவேண்டும். திறப்பில் நிற்க நாம் பாரம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். நாம் சுயநலவாதிகளாக நம்முடைய சொந்தக்  காரியங்களை மட்டுமே கருத்தில்கொண்டு வாழ்பவர்களாக இருக்கக்கூடாது. ஆண்டவருடைய இராஜ்யத்தின் காரியங்களைக்  குறித்து நாம் பாரப்பட வேண்டும்.