கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி  2                           ஞானமான  ஜெபம்                             நீதி 30 : 1 – 9

“என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” (நீதி 30 : 9)

     எவ்வளவு ஞானமான ஜெபம் இது!  இந்த ஜெபத்திற்கு ஆதாரமாக இரண்டு காரியங்களை இங்கு எடுத்துச் சொல்லுகிறார். முதலாவது ‘நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று, சொல்லாதபடிக்கு’ என்று சொல்லுகிறார். இன்றைக்கு அநேகர் நிறைய செல்வத்தை அடைந்து வாழ விரும்புகிறார்கள். எத்தனை கிறிஸ்தவர்கள் இப்படியாக எண்ணி, அதற்காக அதே குறிக்கோளோடு வாழுகிறார்கள். ஆனால் அதில் உள்ள ஆபத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. அது எந்த அளவுக்கு தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று எண்ணிப் பார்ப்பதில்லை.  இன்றைய பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கவனித்துப்பாருங்கள். கர்த்தர் உன்னை அதிகமதிகதமாய் ஆசீர்வதிப்பார் அவர்கள் பிரசங்கங்கள் அதிக செல்வத்தை நாம் வாஞ்சிக்கச் செய்து அதைக் கர்த்தர் கொடுப்பார் என்று விசுவாசிக்கத் தூண்டிவிடுகிறது.

     TVயை எடுத்துக்கொண்டால் அவர்களின் முழக்கங்கள் பெரிதாயிருக்கின்றது. இது ஏமாற்றும் போதனை. உன்  தேவைக்கு அதிகமான பொன்னும், பொருளும் உனக்கு ஆசீர்வாதமாக இருக்காமல் இருக்கலாம். தேவனை நீ சார்ந்து கொள்ளுவதை விட்டு அவைகளைச் சார்ந்துக்கொள்ள உன்னை அவைகள் வழிநடத்தும்.

     இரண்டாவதாக, தரித்திரப்படுகிறதினால்  திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதப்படிக்கும் என்று ஜெபிக்கிறார். இது சரியான ஜெபம். நம்முடைய வாழ்க்கையில் தரித்திரம் நம்மை பலவீனப்படுத்துவதை தேவன் விரும்புவதில்லை. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நிதியையும்  தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்.’ (மத் 6:33) என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். உன்னுடைய தேவை நேரத்தில் தேவனை நோக்கிப் பார். அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசி, அதைச்  சார்ந்து ஜெபி. தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதில் ஒருபோதும் தவறார்.