நவம்பர் 20

      “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோ 4:2).

      ஜெபம் என்பது நம் வாழ்க்கையில் எப்போதாவது செய்யக்கூடிய ஒரு வழக்கமுறை என்பதல்ல. அல்லது நம் சொந்த தேவைக்கு மாத்திரம் ஏறெடுக்கிற ஒன்றல்ல. வேதம் சொல்லுகிறது ஜெபம் என்பது இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிறது. இந்த உலகத்தில் ஜெப சிந்தையோடு வாழுகிற வாழ்க்கை இல்லையென்றால், பலவிதமான காரியங்களினால் பாதிக்கப்படுவோம். ஜெபமானது நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு போராயுதம் என்று சொல்லலாம். ஜெபமே நம் விசுவாசத்திற்கும், சமாதானத்திற்கும் அடித்தள காரணமாக அமைகிறது. ஜெப சிந்தையுள்ள மனிதன் எதிர்வரும் எந்த சூழ்நிலையையும் எளிதில் மேற்க்கொள்ளுவான். நம் வாழ்க்கையில் சந்தேகங்களும், உறுதியற்ற நம்பிக்கையும், நிச்சயமில்லாத எதிர்காலமும் ஏன் காணப்படுகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், சரியான ஜெப வாழ்க்கையை கொண்டிராமல் இருப்பதே காரணமாக உள்ளது.

      ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் என்று பவுல் கூறுகிறார். இது கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற ஆயுதம் ஜெபம். நீங்கள் ஜெபத்தில் ஏறெடுக்கிற விண்ணப்பங்களுக்கு பதிலை பெற்றுக்கொள்ளுவோம் என்பதை விசுவாசியுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஜெபம் என்பது எளிதான ஒன்றல்ல. கெர்ச்சிக்கிற பிசாசானவன் ஜெபிக்க மாத்திரம் விடமாட்டன். ஏனெனில் மெய்யாய் ஏறெடுக்கிற ஜெபத்திற்கு பதில் உண்டு என்பதை அவன் நன்கு அறிந்தவன். அநேக சமயங்களில் நாம் ஜெபிக்கிறோம், ஆனால் அதில் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை காணப்படுகிறது என்பது கேள்விகுறியே. ஆகவேதான் வேதம் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” (1 தெசலோ 5:17) என்று சொல்லுகிறது. நீங்கள் இடைவிடாமல் ஜெபிக்கிற நபரா? ஆராய்ந்து பாருங்கள்.