ஜூன் 27
“என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று சொல்லி இருக்கிறபடியால், நாம் நினைப்பதெல்லாம் கேட்டால் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நினைப்போமானால் அது தவறு. இன்றைக்கு அநேக ஊழியர்களும் விசுவாசிகளும் இந்த வசனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு போதிப்பதும், ஜெபிப்பதுமாக இருக்கிறார்கள். வேதத்தில் நாம் ஒரு வசனத்தைக் குறித்து சிந்திக்கும் பொழுது அதனுடைய முன் பின் பகுதிகளை நாம் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வசனத்தின் முன் வசனத்தைப் பார்ப்போமானால் “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்”(யோவான் 14:14) என்று சொல்லுகிறார். ஆகவே நாம் கர்த்தரிடத்தில் ஒரு காரியத்தை கேட்கும்பொழுது அது தேவனுடைய நாமம் (பெயர்) மகிமைப்படுமானால் மட்டுமே அந்தக் காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு காரியத்தை நாம் தேவனிடத்தில் கேட்கும் பொழுது அது தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக இருக்குமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த வசனத்தின் அடுத்த வசனத்தை வாசிக்கும் பொழுது “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று சொல்லுகிறார். நாம் தேவனிடத்தில் அன்பாக இருக்கும்பொழுது அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோம். அதாவது தேவனுடைய வார்த்தையின் படி நம்முடைய வாழ்க்கை காணப்படும். அப்பொழுது நாம் தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று ஜெபங்களை ஏறெடுப்போம். இன்றைக்கு அநேகர் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றும்படியாகவே ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். ஆனால் தேவன் அவ்விதமான ஜெபங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. ஒருவேளை நாம் இஸ்ரவேல் ஜனங்களைப் போல மாமிச உணவை இச்சித்துப் பெற்றுக் கொண்டதைப் போல, நாமும் நம்முடைய இச்சைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் அது நம்முடைய ஆத்துமாவுக்கு நன்மையாகக் காணப்படாது. கர்த்தருடைய விருப்பத்தின்படி நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்பது மிக நல்லது. அது நம் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கும்.