“ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (1பேதுரு 4:7).

ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் ஒரு தொடர்புகொள்கிற கருவியாக இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் எந்தளவுக்கு தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு வாழுகின்றோமோ அந்தளவுக்கு நாம் ஜெபத்திலும் வளருகிறவர்களாகவும் இருப்பது முக்கியம். பேதுரு ஏன் ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் என்று சொல்ல வேண்டும்? எந்த ஒரு தேவ மனிதனும் என்னுடைய ஜெப வாழ்க்கையில் ஒரு போராட்டம் இல்லாத காரியம் இல்லை என்று சொல்லமுடிவதில்லை. நாம் விழுந்துபோன மனிதர்கள். தேவனோடு கொள்ளும்படியான தொடர்புக்கு நமது விழுந்துபோன சுபாவம் சில வேளைகளில் நமக்குத் தடையாகவே இருக்கிறது. மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல துரைத்தனங்களோடும், அதிகாரங்கலோடும் அந்தகார லோகாதிபதியின் சேனைகளோடும் கூட நமக்குப் போராட்டம் உண்டு என்று வேதம் சொல்லுகிறது. ஆகவேதான் நாம் ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையாக இருப்பது மிக அவசியம். ஜெபம் இல்லாமல் நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றியுள்ளவர்களாக வாழ முடியாது. தேவனால் உபயோகப்படுத்தப்படுகிற எந்தவொரு மனிதரும் ஜெபிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆகவே நாம் ஜெபத்தை அற்பமாக எண்ணிவிடக் கூடாது. ஜெபம் என்பது தேவனோடு கொண்டிருக்கின்ற ஒரு ஐக்கியமாக இருக்கிறது. நம்முடைய ஜெப வாழ்க்கை மிக முக்கியம் என்பதை ஒருக்காலும் நாம் மறந்துவிடக் கூடாது. நாம் கர்த்தருடைய வசனத்தைப் பற்றிக்கொண்டு ஜெபத்தில் உறுதியாயிருக்கும்பொழுது நிச்சயமாக அவர் நமக்கு உன்னத பெலத்தைக் கொடுக்கிறதை நாம் பார்க்க முடியும்.