நவம்பர் 17       

 “எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை” (யாக்கோபு 5:17).

      இன்றைக்கு நம்முடைய ஜெபம் கருத்தாய் காணப்படுகிறதா? ஆம்! இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்தான ஜெபமானது மறக்கப்பட்டு போன ஒன்றாக இருக்கிறது. நம்முடைய ஜெபங்களில் வெறும் அர்த்தமற்ற வார்த்தைகளையும், வீண் காரியங்களுக்குமே பயன்படுத்துகிறோம். ஆகவேதான் நம்முடைய அநேக ஜெபங்களுக்கு பதிலைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். நம்முடைய ஜெபங்களில் ஏன் கருத்தான ஜெபம் காணப்படுவதில்லை? 1. நாம் ஏறெடுக்கிற ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்பதில் உறுதித்தன்மை இருப்பதில்லை. 2. நம் சுயத்தை நிறைவேற்றவே நம்முடைய ஜெபங்கள் காணப்படுகின்றது.

      எலியா என்பவன் நம்மைப்போல பாடுள்ள மனுஷன் என்று சொல்லப்படுகின்றது. எலியா பல பாடுகளின் ஊடாகவும், கஷ்டங்களை சகித்து வாழ்ந்த எளிமையான மனிதன் தான். ஒருவேளை அவனுக்கு விசேஷித்த தாலந்துகள் இருந்தது என்று வேதத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால் அவன் கர்த்தரை நோக்கி ஊக்கமாக ஜெபித்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்.

      “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” (சங் 121:1) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். நம்முடைய ஜெபம் பெலவீனமாகக் காணப்படுவதற்கு காரணம், நமக்கு ஒத்தாசை வரும் பர்வதத்திற்கு நேராக நம் கண்களை ஏறெடுப்பதில்லை. கருத்தான ஜெபம் மாத்திரமே வெற்றியுள்ள போருக்கு ஆதாரம்.