‘எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான்.’ (யாக்கோபு 5:17)
இன்றைக்கு உண்மையான ஜெப வாழ்க்கையைக் கொண்டிருக்கிற விசுவாசிகளை காண்பது அரிதாயிருக்கிறது. அவ்விதமாகவே அருமையாய் அழகு வார்த்தைகளை அள்ளிக்கொட்டியும் குலுங்கக் குலுங்கக் சிரிக்கவைக்கிறதும், சத்தமிடுகிறதுமான அநேக பிரசங்கிகள் உண்டு. ஆனால் கர்த்தருடைய பாதத்தில் பாரத்தோடே, உண்மையோடே, கண்ணீரோடே ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கிற பிரசங்கிகள் சொற்பமே. உன்னுடைய பரிதாபமான ஜெபவாழ்க்கையைக் குறித்து உள்ளான இருதயத்தில் வருத்தப்படு, வேதனைப்படு, துக்கப்படு, வெட்கப்படு அது மிக நன்மையானது. ஊழியனே! நீ ஊழியன் என்று பெயர் பெற்றும் அந்த பெயருக்கேற்ற ஜெபவாழ்க்கை உன்னில் இல்லை. நீ பரத்திலிருந்து வரும் ஒத்தாசையை நாடுவதில்லை. தேவ ஞானமும் பெலமுமில்லாமல் உன்னால் இந்த ஊழியத்தைச் செய்யமுடியாது என்பதை நீ உணரவில்லை. உன்னுடைய ஊழியம் எவ்வளவு உத்திரவாதம் உள்ளது, கனமுள்ளது என்பதைக் குறித்த பயம் உன்னில் இல்லாததால், பிரசங்கபீடத்திற்கு துணிந்து செல்லுகிறாய். நான் அழகாக நேர்த்தியாகப் பிரசங்கிப்பேன், எனக்குப் பிரசங்கிக்கமுடியும் என்று எண்ணித் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கச் செல்லுகிறாய். காரணம் கர்த்தருடைய அநுகிரகம் இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று உணரக்கூடாத நிலையில் உன் கண்கள் சொருகிப்போயிருக்கின்றன.
அநேகர் ஜெபத்திற்கு, சாக்குப்போக்கு சொல்லுகிறார்கள். எலியாவுக்கும் நம்மைப் போலவே பல சோதனைகள், தடைகள், எதிர்ப்புகள் விழுந்துபோன மனிதனின் தன்மைகள் மற்றும் ஜெபத்திற்கு என்னென்ன தடைகள் வரக்கூடுமோ அவ்வளவு தடைகளும் வந்தன. ஆனால் அவைகளை மேற்கொள்வதுதான் உண்மையான ஜெப வாழ்க்கை இருந்தது. மேலும் எலியா கருத்தாய், விழிப்போடு, ஜெபித்தார். ஆகவேதான் பதிலைப் பெற்றார். உன் ஜெபம் எப்படியிருக்கிறது? யோசித்துச் செப்பனிடு. ஊக்கமான, கருத்தான ஜெபம் வெற்றியைக் கொண்டுவரும்.