பிப்ரவரி 9

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:17).

பொதுவாக ஜெபம் என்பது தேவனோடு நாம் கொள்ளும்படியான உறவு. வேதத்தில் ஜெபிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து அதிகமாய் சொல்லப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம். ஜெபிக்காமல் இருப்பது பாவம் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜெப வாழ்க்கை என்பது பொதுவாக எல்லாப் பரிசுத்தவான்களும் சொல்லும்படியான காரியம், “நான் ஜெபத்தில் போராட வேண்டியதாய் இருக்கிறது, அநேக வேளைகளில் நான் ஜெபிக்க முடிவதில்லை, அதற்காக அதிகப் பிராயசப்பட வேண்டியதாயிருக்கிறது” என்பதே . நாம் ஜெபிப்பது பிசாசுக்கும் பிடிக்காது. ஆகவே அவன் நம்மை ஜெபிக்க விடவே மாட்டான். இடைவிடாமல் ஜெபிப்பது என்றால் என்ன? ஜெப சிந்தையோடு வாழுகிற ஒரு வாழ்க்கை என்றும் சொல்லலாம். “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி” (எபேசியர் 6:18) என்று வேதம் சொல்லுகிறது. பலவிதமான ஜெபம் என்றால் தேவனை ஸ்தோத்தரிப்பது, மற்றவர்களுக்காக, நமக்காக அநேகவிதமான பாரங்களுக்காக நாம் ஜெபிப்பது ஆகியவை ஜெபத்தில் நாம் அதிக நேரம் செலவிடுவதற்கு அது வாய்ப்பாக இருக்கும். சகலவிதமான வேண்டுதல் என்பதைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம் என்றால் அது நாம் இன்னும் அதிமாக ஜெபிப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய ஜெப வாழ்க்கை என்பது தேவனிடத்திலிருந்து நாம் பெரிய காரியங்களை எதிர்பார்பதற்கு உதவியாக இருக்கிற ஒன்று. “என்னை நோக்கி கூப்பிடு அப்பொழுது நான் உனக்கு அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” என்று தேவன் சொல்லுகிறார். மேலும் நாம் ஜெப சிந்தையுள்ளவர்களாக வாழும்பொழுது அநேக தேவையில்லாத காரியங்களுக்கு இடங்கொடாமல் இருக்க அது உதவியாய் இருக்கும். ஏனென்றால் பல தேவையில்லாத குழப்பங்களும் கவலைகளும் ஐஸ்வரியத்தின் மயக்கமும் நம்முடைய இருதயத்தையும் சிந்தைகளையும் ஆட்க்கொண்டு நம்மைப் பின்னிட்டு இழுக்க ஏதுவுண்டு என்பதை நாம் அறிந்துகொள்வோம். ஆகவே நாம் இடைவிடாமல் ஜெபிப்பது அவசியம். பவுல் தன்னுடைய வாழ்க்கையில் இவ்விதமாய் ஜெபிப்பதைக் குறித்து வேதத்தில் பல இடங்களில் எழுதியிருக்கிறார். ஆகவே நாமும் அவ்விதமாக ஜெபிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை பெற்றுக்கொள்வோமாக. கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.