“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோ 4:2)

      இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லும்போது நாம் இடைவிடாமல் முழங்காலில் நிற்க வேண்டுமா? இல்லை. நம்முடைய மனநிலையைக் குறித்து இந்த இடத்தில் கூறுகிறார். நம்முடைய எல்லா விதமான சூழ்நிலையிலும் இடைவிடாமல் கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும். நம்முடைய நிலையை கர்த்தருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கர்த்தரைச் சார்ந்து வாழும்படியான வாழ்க்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். அநேக மக்கள் ஜெபம் என்பது ஏதோ ஒரு கடமை என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஜெபம் என்பது தேவனோடு கொண்டிருக்கும் உறவின் இனிமையைக் காட்டுகிறது.

      “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச 5:17-18). ஒரு மெய்யான கிறிஸ்தவன் எல்லாவற்றிற்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றிகளை செலுத்துபவனாக காணப்படுவான். ஏனென்றால் தேவனுடைய கிருபைகளை அவன் அறிந்தவனாக, தேவனோடு எப்பொழுதும் ஒரு உறவைக் கொண்டிருப்பான். தன்னை இரட்சித்த கிறிஸ்துவுக்கு துதிகளை ஏறெடுப்பான். தன்னை முழுமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துவான். நாம் கேட்காமல் அநேக நன்மைகளைக் கர்த்தர் நமக்குச் செய்திருக்கிறார். அவர் நம்மை கண்ணின் கண்மணிகளைப் போல அனுதினமும் பாதுகாத்து வருகிறார். ஆகவே நாம் எல்லாவற்றிலும் அவரைச் சார்ந்து, அவரோடு இடைவிடாமல் ஐக்கியத்தைக் கொண்டிருப்போமாக.