பிப்ரவரி 10

“கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்” (யாத்திராகமம் 34:5).

வேதத்தில் தேவன் தம்முடைய நாமத்தின் மூலமாக தம்மைக் குறித்துச் சொல்லுகிறதைப் பல இடங்களில் வாசிக்கின்றோம். ஆகவே தேவனின் பலவிதமான நாமங்கள் அவருடைய குணாதிசயங்களை அறிந்து கொள்ளவும் அவரைப் பின்பற்றவும் நமக்கு மிக உதவியாக இருக்கக் கூடியவைகள். “கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்” (யாத்திராகமம் 34:6-7). தேவனுடைய நாமத்தைப் பணிந்து குனிந்து துதிப்பதும் அவரை ஸ்தோத்தரிப்பதும் ஜெப வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்காளிப்பாய் இருக்கிறது.  நாம் தேவனை அறிந்துகொள்வதற்கு அவருடைய நாமம் மிக உதவியாயிருக்கிறது.  அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது. அவர் இன்னார் என்று அறியாமல் அநேக வேளைகளில் நாம் அவரோடு கூட எவ்விதமாக தொடர்புள்ளவர்களாய் வாழ வேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோம். கர்த்தருடைய நாமத்தை நாம் அறிந்து நம்முடைய ஜெபத்தில் அவரைத் துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்  நல்லது. ஜெப வாழ்க்கையில் நாம் நம்முடைய பாரங்களை மாத்திரம் அவரிடத்தில் சொல்லுகிறதாக எண்ணுகிறோம். தேவனுடைய பலவிதமான நாமத்தை நாம் அறிந்து அவரைத் துதித்துப் போற்றுவது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகப் பிரயோஜனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.