செப்டம்பர் 8          

‘என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும், மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்’ (சங் 104:1)

                    ஒரு கிறிஸ்தவன், துதியின் கிறிஸ்தவனாக இருக்கவேண்டும். துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது’ (சங் 147 : 1) மெய்யாலும் துதிக்கும் கிறிஸ்தவன் சந்தோஷமுள்ளவனாய் இருப்பான். அது இன்பமானது மகிழ்ச்சிகரமானது, உனக்கு அது ஆனந்தத்தைக் கொடுக்கும். அது மாத்திரமல்ல அது தேவனுக்கு ஏற்றதாய், அங்கீகரிக்கப்படுகிறதாய் இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கை எவ்வளவு இருளானதாக இருந்தாலும், நீ தேவனைத் துதி. அவர் இருளை வெளிச்சமாக மாற்றவல்லவர். தேவனுடைய பிள்ளைகளுக்கு இருளையும் தேவனின் வல்லமையால் மறைவிடமாக்கித்தருவார். இன்றைக்கு கிறிஸ்தவர்களின் உண்மையான பிரச்சனை தேவன் யார்? என்பதை அறியாததே. வேதம் சொல்லும் தேவனை அவர்கள் அறியாமல் தங்களுக்குத் தோன்றுகிற வண்ணமாக, ஒரு எல்லைக்குட்படுத்தப்பட்ட தேவனாகவே அவர்களுக்குக் காணப்படுகிறார். ஆகவேதான் அவர்கள் விசுவாச வாழ்க்கையில் வளருவதில்லை. விசுவாசத்தின் சவால்களைச் சந்திக்கமுடியாதவர்களாகத் தடுமாறுகிறார்கள். அவர்களுக்கு சொல்லப்போனால் இந்த தேவன் மற்ற தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறவைகளில் ஒருவராகக்கூட எண்ணுமளவுக்கு அறியாமையுள்ளவர்கள்.

             தேவன் பெரியவர். அவரைவிட பெரியவர் ஒருவருமில்லை, அவருக்கு நிகரானவர் ஒருவருமில்லை. ‘நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகாபெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவிடமுடியாதது.’ (சங் 147 : 5) அவர் பெரியவர் மட்டுமல்ல, அவருடைய அறிவுக்கு எல்லையில்லை. அன்பானவர்களே! இந்த தேவனை, அவருடைய உன்னதமான மேன்மையை, அவர் ஒருவரே பெரியவர் என்பதை நினைவுகூர்ந்து துதிக்கவேண்டும்.

                மேலும், இவர் மகிமைபொருந்தியவர். எல்லா கனத்துக்கும், மகிமைக்கும், மேன்மைக்கும் இவரே உரியவர். இந்த மகிமை நிறைந்த தேவனுக்கு நீ ஸ்தோத்திர பலியிடும்போது அவரை மகிமைப்படுத்துகிறாய். அவ்விதமாய் நாம் அவரை மகிமைப்படுத்துகிறோமா?