ஆகஸ்ட் 23                             

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி,  தேவனைத் துதித்துப்பாடினார்கள்” (அப் 16 : 25)

      இது நமக்குச் சாத்தியமாகுமா? பவுலும், சீலாவும் தங்களுடைய சொந்த பெலத்தினால் அல்ல, தேவ பெலத்தால் இவ்விதம் செய்யக்கூடியவர்களானர்கள். ஒரு கிறிஸ்தவன் வாழ்க்கையில் பல நெருக்கங்களின் மத்தியில் தேவனை நிருபிக்கும்படியாக அழைக்கப்படுகிறான். ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ (பிலி 4 : 13) என்று பவுலோடு அவனும் சொல்லக்கூடியவனாய் இருக்கிறான்.

    பவுலும், சீலாவும் அநேக அடிகள் அடிக்கப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்டார்கள். இவ்விதமாக அவர்கள் கொடூரமாய் நடத்தப்பட அவர்கள் எந்த தீங்கும் செய்யவில்லை. ஒருவேளை நீ செய்யாத குற்றத்திற்காக, தற்போது தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். பவுலும், சீலாவும் எப்படி இவ்விதமாக இந்த சூழ்நிலையில், ஜெபிக்கவும் துதிக்கவும் முடிந்தது? அவர்கள் தங்களுக்கு எது நேரிட்டாலும் தேவன் அனுமதிக்காமல் நேரிடவில்லை, தங்களுக்குத் தேவன் இதை நன்மைக்கேதுவாக அனுமதித்திருக்கிறார் என்று நம்பினார்கள். ஆகவே நாங்கள் சோர்ந்துப்போகமாட்டோம் என்று அவர்கள் மனதில் உறுதியான விசுவாசமுள்ளவர்களாய் இருந்திருப்பார்கள்.

     மேலும் பவுலும், சீலாவும் பாடிக்கொண்டிருந்த பொழுது, ‘காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.’ (அப் 16 : 25). நீ ஒரு கிறிஸ்தவன் என்றால், உன்னைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதே. நீ எவ்விதம் பேசுகிறாய், எவ்விதம் நடக்கிறாய் என்பதை ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. நீ நடந்து கொள்ளும் விதம் ஆண்டவருக்கு மகிமையாயிருக்கிறதா அல்லது தூஷணமாயிருக்கிறதா என்பதை சிந்தித்துப்பார். உன் கஷ்டநேரத்தில் தேவனுக்குத் துதிசெலுத்து. துதி சத்தத்தால் உன் உள்ளம் நிறைந்தால் தூயரின் பெலன்கிடைக்கும். உன் துன்ப நேர சாட்சி மற்றவர்களை கிறிஸ்தவண்டை வழிநடத்தும்.

      தேவனை துதிப்பது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.