கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 14         எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்         1 தெச 5:6 –18

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம்செய்யுங்கள்; அப்படி செய்வதே

கிறிஸ்துவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெச 5: 18)

     எப்போதும் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செலுத்துகிற ஒரு கிறிஸ்தவன் மகிழ்ச்சியுள்ளவனாய் காணப்படுவான். இது தேவனுடைய கட்டளை. அவன் அவ்விதம் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியும்போது  ஆசீர்வாதம் பெறுவான். இஸ்ரவேல் மக்கள் வனாந்திரபாதையில் தேவன் செய்த எத்தனையோ அற்புதங்களைக் கண்டார்கள். தேவன் உண்மையுள்ளவர் என்பதை கண்டார்கள்.தேவனின் வல்லமையை பெரிதான அளவில் கண்டார்கள். ஆனாலும் தேவனை ஸ்தோத்தரிக்கத் தவறினார்கள். ஒரு சிறு கஷ்டம் வந்தாலும் உடனே முறுமுறுப்பதே அவர்களுடைய வழக்கமாக இருந்தது. அவர்களுடைய இருதயம் அதிருப்தியினால் நிறைந்திருந்தது. ஆகவே முறுமுறுத்து தேவனுடைய மனிதனைக் குற்றஞ்சாட்டினார்கள். தங்கள் பழைய எகிப்தின் ஆகாரங்களையும் அவ்விதமான வாழ்க்கையையுமே வாஞ்சித்தார்கள். அவர்கள் சுதந்தரிக்கப்போகிற கானானின் மேன்மையை அவர்கள் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்ப முடியவில்லை.

    அன்பான சகோதரனே! சகோதரியே! நீயும் உன் வாழ்க்கையில் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாயா? தேவன் உன் வாழ்க்கையில் செய்திருக்கிற நன்மைகளை நினைவுகூர்ந்து அவரைத் துதிக்க மனதில்லையா? உன்னுடைய வாழ்க்கையில் தேவனால் அனுமதிக்கப்படுகிறவைகள் நன்மைக் கேதுவானவைகளாக அனுமதித்திருக்கிறார் என்று எண்ணி தேவனை ஸ்தோத்தரிக்கமுடியவில்லையா? அப்படியானால் அதைக்குறித்து வருத்தப்படு. தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்டு தேவனை ஸ்தோத்திரி.

    பவுலும் சீலாவும் அடிபட்டு உதைப்பட்டு சரீரம் வேதனைக்குள்ளான வேளைகளில் கூட தேவனை நோக்கி ஜெபித்தார்கள், துதித்தார்கள். நீயும் உன்னுடைய பாரங்களை தேவனிடத்தில் சொல்லி ஜெபி. தேவன் அவைகளில் விடுதலைக்கொடுப்பார் என்று விசுவாசித்து துதி. அப்பொழுது தேவனுடைய விடுதலையைக் காண்பாய்.