ஆகஸ்ட் 26
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்” (சங் 136:23)
தேவனை நாம் அதிகமதிகமாய் துதிக்க அவர் பாத்திரமானவர். ஒரு கிறிஸ்தவன் தேவனைத் துதிக்கும் துதியை எப்போதும் தன்னில் கொண்டிருக்கவேண்டும். அவரை நம்முடைய வாழ்க்கையில் துதிக்கும்படி, எத்தனை எத்தனையோ நன்மைகளை நமக்காகச் செய்திருக்கிறார். தேவனைத் துதிப்பது நம்முடைய வாழ்க்கையில் எல்லா அதிருப்தியை நீக்கி நிறைவைக் கொடுக்கும். ‘கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.’ (சங் 147:1) தேவனுடைய மக்கள் துதிக்கும்படியாக தேவனால் எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள். தேவன் தம்முடைய மக்களைக் குறித்து என்ன சொல்லுகிறார்? இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்‘ (ஏசாயா 43:21) அருமையான சகோதரனே! சகோதரியே! கர்த்தர் உன்னைப் பார்த்து இவ்விதம் சொல்லமுடியுமா?
‘நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்’ நம்முடைய உயர்வில் அல்ல, நம்முடைய தாழ்வில் நினைத்தவர் இந்த தேவன். அவர் நம்மை நினையாதிருப்பாரானால் நாம் நமது துக்கத்தில், குறைவில் அழிந்து போயிருப்போம். ஆனால் தேவன் அவ்விதம் நாம் கீழாகப்போகாதபடி நம்மை நினைத்திருக்கிறார். மனிதர்கள் நம்மை அலட்சியமாக எண்ணின வேளைகளில் தேவன் நம்மை அவ்விதம் நினைக்கவில்லை. ஆகவே அவர் நம்முடைய குறைவின் நாட்களில், நம்மை நினைவில் வைத்திருக்கிறார் என்று நாம் எண்ணி தேவனைத் துதிப்போமாக. எத்தனை சமயங்களில் நமது எதிராளி நம்மை விழுங்கப்பார்த்த வேளையில் கர்த்தர் நம்மை அவனுக்கு இரையாய்ப் போக அனுமதிக்கவில்லை!
‘கர்த்தரைப்பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.’ (எரேமியா 20:13) நாமும் சங்கீதக்காரனைப்போல் ‘என் நாவு உமது நீதியையும், நாள் முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்‘ என்று சொல்வோமாக.