கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பார் 17            தேவ வல்லமை            எண் 14:10-20

‘என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக’ (எண் 14:18)

    இந்த வார்த்தை மோசேயினால் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். கானான் தேசத்தை உளவுப் பார்க்கச் சென்ற 12 பேரில்  காலேப், யோசுவா இருவரையும் தவிர மற்ற 10 பேரும் கானான் தேசத்தை சுதந்தரிக்க முடியாது என்ற துர்ச் செய்தியைப் பரப்பினார்கள். துர்ச்செய்தி வெகுசீக்கிரத்தில் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பரவியது. காலேப், யோசுவா மூலமாய் சொல்லப்பட்ட விசுவாச வார்த்தையைக் காட்டிலும் துர்ச்செய்தி எவ்வளவு சீக்கிரம் பரவியது பாருங்கள்! மோசேயின் மேலும், மோசேயோடே இருந்தவர்கள் மேலும் கல்லெறிய வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். தேவனோ இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் அழிப்பேன் என்றும், மோசேயையோ பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றும் சொன்னார். அந்த நேரத்தில் மோசே இவ்விதமாய் ஜெபித்தார். “ஆண்டவரே! இந்த பாதகமான சூழ்நிலையை மாற்றத்தக்கதாக உமது வல்லமை பெரிதாய் விளங்குவதாக”.

    ஆம்! தேவனுடைய மகிமையைக் குறித்து மோசே வைராக்கியமாய் காணப்பட்டார். ஒரு மெய் ஊழியன் முதலாவது தேவனுடைய நாமத்தின் மகிமையை வெளிப்படுத்துவதையே வாஞ்சிப்பான். நடந்தது என்ன? அவிசுவாசத்திற்கு காரணமானவர்களை தேவன் தண்டித்தார். ‘அந்த தேசத்தை சோதித்துப்பார்க்கும்படி மோசேயினால் அனுப்பப்பட்டு திரும்பி, துர்செய்தி கொண்டுவந்து சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி செய்தவர்களாகிய மனிதர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்’ (எண் 14:36, 37).  அது மாத்திரமல்ல அந்த பொய்யை நம்பின அந்த மக்களின் மதியீனத்தை தேவன் விளங்கப்பண்ணினார்? (எண் 14:44, 45). அவருடைய மகிமையை வெளிப்படுத்தினார். நாம் ஆண்டவருடைய நாமத்தின் மகிமையைக் குறித்து நம்முடைய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபையிலும் வைராக்கியமுள்ளவர்களாய் இருக்கிறோமா? இன்றைய கிறிஸ்தவ மக்கள் அப்படியல்ல! இது மிகவும் வருத்தமானது. நீ எப்படி?