ஆகஸ்ட் 17                                               

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும்  அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே  (எபே 3 : 20)

     தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படும் வல்லமைக்கு அளவே இல்லை. தேவன் அளவற்ற வல்லமையுள்ளவறாக இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த சித்தமுள்ளவராயிருக்கிறார். நாம் தேவனை நோக்கி அநேக தேவைகளுக்காக, அநேகக்காரியங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்படும்படியாக ஜெபிக்கிறோம். அது நல்லது. நாம் ஜெபிக்க வேண்டும், அதிகமாய் ஜெபிக்கவேண்டும். நம்முடைய அனைத்துப் பாரங்களையும் தேவனிடத்தில் எடுத்துச்செல்லவேண்டும். அது மிக மிக அவசியமானது. அதே சமயத்தில் நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் தேவன் இவ்விதமாய் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், எண்ணுகிறோம். இதுவும் நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது, இது சாதாரணமானதல்ல, உயர்வானது.

    ஆனால், நம்முடைய ஜெபமும் எதிர்ப்பார்ப்பும், நினைவும் ஒரு எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. தேவன் இவ்விதமாக செயல்படவேண்டும் என்று நம்முடைய மனித விளங்குதலின் அளவில் எண்ணுகிறோம், ஆனால் பவுல் இதற்குமேல் தேவன் செயல்படுகிறார் என்றும் அவருடைய வல்லமை இன்னும் பெரிதான அளவில் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த சித்தமுள்ளவராயிருக்கிறார் என்றும் எழுதுகிறார். அதிகமாக மாத்திரமல்ல, மிகவும் அதிகமாய் என்று சொல்லுகிறார்.

    தேவன் இவ்விதம் செயல்பட வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசி. நம்முடைய ஜெபம் குறைவுள்ளது, நாம் எண்ணுவதும் ஒரு குறிப்பிட்ட அளவில் மாத்திரமே உள்ளது. ஆனால், தேவன் அதற்கு மேலும் மிக அதிகமாய் தம்முடைய வல்லமையை உன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியும் என்று எதிர்பார். உன்னுடைய நிலை எதுவாயிருந்தாலும் நீ அதற்கு மேல்  செயல்படும் தேவனுடைய வல்லமைக்காக எதிர்பார்த்திரு. தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதில் வல்லவராயிருக்கிறார் என்பதை நீ காண்பாய்.