‘ஏழையான ஒரு விதவையும் வந்து ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.’  (மாற்கு 12:42)

     தேவனுடைய கணக்கு எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது பாருங்கள்!’ இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிரே உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள் (மாற்கு 12 : 41). வழக்கமாக தேவாலயத்தில் ஸ்திரீகளும், ஆண்களும் சென்று காணிக்கைகளைச் செலுத்துவார்கள். அங்கு 13 பெரிய உண்டில்கள் இருக்கும். ஐசுவரியவான்கள் அநேகர் அங்கு வந்தார்கள் என்று பார்க்கிறோம். ஒருவேளை உயர்ந்த உடைகளோடும், பணக்காரர்கள் என்பதர்கான அநேக வெளியான தோற்றங்களைக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்கள் அதிகமாய்ப் போட்டார்கள். அவர்கள் அதிகமான பணத்தை அள்ளிக்கொண்டு வந்திருப்பார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்த்து மெச்சிக்கொள்ளவேண்டும் என்று எல்லோரும் பார்க்கும்படியாக போட்டிருந்திருக்கலாம்.

      ஆனால் ஆண்டவராகிய இயேசு அவர்களை மெச்சிக்கொள்ளவில்லை. அவர்கள் இருதயம் தேவனுக்கு ஏற்றதாக இல்லை. ஒருவேளை நீயும் அதிகம் காணிக்கை கொடுக்கிறவராக இருக்கலாம். நான் அதிகம் காணிக்கைக் கொடுப்பதினால் கர்த்தர் என்னை அங்கிகரீப்பார் என்றும் எண்ணலாம். இல்லை, ‘மனிதனோ முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ இந்த ஏழை விதவை இரண்டு காசுகளை மாத்திரமே போட்டாள். காசு என்று இங்கு சொல்லப்படுவது நம்முடைய பைசாவுக்குச் சமம். இவள் அந்த இரண்டு காசையும் மற்றவர்கள் பார்த்தால் என்ன எண்ணுவார்களோ என்ற பயத்துடன் போட்டிருக்கலாம். அவள் ஏழை என்று சொல்லப்படுகிறது. அவள் உடை மிகவும் எளிமையானதாக இருந்திருக்கும். ஆனால் ஆண்டவர் என்ன சொன்னார் ‘மற்றவர்களைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.’ தேவன், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட எப்படிக் கொடுக்கிறோம் என்பதையே பார்க்கிறார். நமது பணத்தைவிட நமது அர்ப்பணிப்பையே எதிர்ப்பார்க்கிறார்.