கிருபை சத்திய தின தியானம்

மே 15                      இடங்கொண்டு பெருகுவாய்            ஏசாயா 54:1-10

“நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்;

உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு,

பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்”(54:3).

       அருமையானவர்களே இஸ்ரவேல் மக்கள் தேசமற்று அடிமைகளாய் இருந்த காலங்களில், கர்த்தர் தாமே இந்த நம்பிக்கையூட்டும் வசனங்களைக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம். உன்னுடைய வாழக்கையில் நீ இருந்கும் நிலையில் இருந்து மாறி புதிய சூழ்நிலைக்குள் கொண்டுவருவது மாத்திரமல்ல, நீ வலது புறத்திலும் இடது புறத்திலும் நே இருக்கிற இடங்கொண்டு பெருகுவாய் என்று தேவன் சொல்லுகிறார்.

      அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் அவ்விதமாகவே தேவன் செய்கிறவராகவே இருக்கிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னுமாக ஏசாயா 35:1-2 வது வசனங்களில் “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்.அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்” என்று சொல்லுகிறார்.

      அருமையான சகோதரனே சகோதரியே இந்தக் காலங்களில் வறண்ட நிலத்தைப் போல உன் நிலை காணப்படுமானால், புஷ்பத்தைப்போலச் செழிக்கும் நிலை வரும் என்று தேவன் சொல்லுகிறார். இன்னுமாக ஏசாயா 49:8 –ல் “அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;” என்று சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையில் ஏற்ற வேளையில் தேவன் உனக்கு நன்மையானதை கொடுப்பார். நீ பாழாய்க் கிடக்கிற இடங்களை செம்மைப்படுத்தி, சீர்படுத்தி சுதந்தரித்துக் கொள்ளவும் கர்த்தர் தாமே உனக்கு இரங்குகிறவராகவே இருக்கிறார். திடன்கொள். வறட்சி எப்பொழுதும் வறட்சியாகவே இருக்காது. செழிக்கும் காலமும் வரும் என்பதை நினைவில் கொள்க.