“மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” (நீதிமொழிகள் 17:22).

மனதில் மகிழ்ச்சியாய் வாழுகிற வாழ்க்கை எப்போது நமக்கு கிடைக்கும்? இன்றைக்கு அநேகர் இந்த உலகத்தில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். உலக வழிமுறைகளில் தேடுகிறார்கள். ஆனால் அது மெய்யான மகிழ்ச்சியைக் கொடுக்குமா? இல்லை. அநேகர் இந்த உலகத்தினாலும் உலக சிற்றின்பங்ககளானாலும் ஐஸ்வரியத்தினாலும் மேன்மையினாலும் மனமகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். இன்றைக்கு ஒவ்வொரு மனிதனும் மனமகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறான். அதற்காகப் பிரயாசப்படுகிறான். ஆனால் மெய்யான மனமகிழ்ச்சி என்பது தேவன் மாத்திரமே நமக்குக் கொடுக்க முடியும். “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சந்தோஷத்தை நமக்குக் கொடுக்கிறார். அது நிறைவாய் இருக்கும்படிக்குக் கொடுக்கிறார். இந்த உலகத்தில் கிறிஸ்துவின் மூலம் பெற்றுக்கொள்ளும்படியான இந்த மனமகிழ்ச்சி நிறைவானதும் நம்முடைய ஆத்துமாவுக்கு திருப்தியளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய பிள்ளையாக மாற்றியிருக்கிற இந்த சிலாக்கியத்தை நாம் பெற்றிருப்போமென்றால், இந்த மனமகிழ்ச்சி நிறைவாயிருக்கும். இது நல்ல மருந்து என்றும் வேதத்தில் பார்க்கிறோம்.