மே 15   

“கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை” (யாத் 9:12)

இந்த இடத்தில் இஸ்ரவேல் மக்கள் பயங்கரமான சூழலில் இருந்தபொழுது, பார்வோன் இரங்கி அவர்களை விடுவிக்க வேண்டுமென்று அவர்கள் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள் . ஆனால் நடந்ததோ வேறு. இந்த இடத்தில் பார்வோனின் இருதயம் அவர்களை  விடாதபடிக்கு கடினமாக இருந்தது. இதற்கு காரணம் என்ன? இந்த வசனத்தில் நாம் பார்வோனின் இருதயத்தைக்  கர்த்தர் கடினப்படுத்தினார் என்று பார்க்கிறோம். இங்கு தேவனின் சர்வ ஏகாதிபத்தியத்தைப்  பார்க்கிறோம். இந்த மனிதனின் இருதயத்தை ஏன் ஆண்டவர் கடினப்படுத்த வேண்டும்? அதன் நோக்கம் என்ன? தேவன் தம்முடைய மகிமையை வெளிப்படத்தவே  பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார். ஆனால் ஜனங்கள்  ஆண்டவர் தங்களை விடுவிக்கவில்லையே என்பதாக முருமுறுதார்களே தவிர, அதனுடைய நோக்கம் என்ன என்பதை அறியாமல் இருந்தார்கள்.

நம்முடைய வாழ்க்கையிலும் அநேக சமயங்களில் சூழ்நிலைகள் மிகக்  கடினமானதாக காணப்படலாம். நம்முடைய எதிர்பார்ப்புக்கு எதிராகவே காரியங்கள் நடை பெறலாம். இவைகளின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? தேவன் ஒருவேளை நம்முடைய வாழ்க்கையில் நமக்கு விடுதலை கொடுக்க விரும்பவில்லை என்பதாக  யோசிக்கலாம். ஆனால் நிச்சயமாக தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குச்  செவி கொடுத்து, அவர்களை இக்கட்டிலிருந்து விடுதலையாக்குகிறவராக இருக்கிறார். நம்முடைய ஆபத்தில் ஏன் நமக்கு உடனடியாக விடுதலை தரவில்லையென்றால்  தேவன்  அதை ஒரு நோக்கத்தோடு செயல்படுத்துகிறார் என்பதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். தேவன் தம்முடைய திட்டத்தின்படி ஏற்ற வேளையில் அதைச்  செய்வார். அதை நிச்சயமாக நேர்த்தியாகச்  செய்வார். என் ஆண்டவர் எனக்கு உதவி செய்வதில் விருப்பம் உள்ளவராக இருக்கிறார் என்ற விசுவாச உணர்வோடு நாம் வாழக் கற்றுக் கொள்வது நல்லது. தேவனுடைய சித்தத்திற்கு காத்திருந்து, அவருடைய வழியில் நாம் வாழும் பொழுது தேவன் ஏற்றவேளையிலே அதைச்  செய்து முடிப்பார். ஆண்டவருடைய வேளைக்கும், அவருடைய திட்டத்திற்கும் பொறுமையுடன் காத்திருப்பதே சாலச்சிறந்தது.