கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல்: 3           படுகுழியை வெட்டுகிறவன்           பிரசங்கி . 10 : 1 – 10

 

‘படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்;

அடைப்பைப் பிடுங்கிறவனைப் பாம்பு கடிக்கும்’

                         (பிரசங்கி 10 : 8)

 

மற்றவர்களுக்கு தீமையை நினைப்பது, மற்றவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படுவது, ஒரு கிறிஸ்தவனின் குணமல்ல. மற்றவர்கள் தீமையை அனுபவிப்பதினால் உனக்கு என்ன பயன் கிட்டும்? அவர்களின் அழிவை நீ ஏன் உன் இருதயத்தில் இரகசியமாக விரும்புகிறாய்? சிலர் நன்றாக பேசுவார்கள். ஆனால் அவர்கள் உள்ளம் மற்றவர்களின் கெடுதியையே விரும்பிக் கொண்டிருக்கும். உலக மனிதன் அவ்விதமாகதான் இருப்பான். தேவனை அறியாதவன் அவ்விதம் எண்ணுவான், செயல்படுவான்.

 

உன்னுடைய இருதயத்தில் இவ்விதமான தவறான எண்ணங்களை அனுமதிக்கும் போது உன் இருதயத்தில் பாவத்தை அனுமதிக்கிறாய். அது கிறிஸ்துவின் சிந்தைக்கு புறம்பானது. ஆண்டவராகிய இயேசு, ‘உங்களுடைய சத்துருக்களுக்காக ஜெபியுங்கள்’ என்று சொன்னதை மறந்துவிடாதே. உங்களை விரோதிக்கிரவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் இருதயத்தில் சிநேகியுங்கள். அப்போது தேவன் அதில் பிரியப்படுவார்.

 

மேலும் மற்றவர்கள் விழவேண்டும் என்று எண்ணி படுகுழியை வெட்டினால், அதை வெட்டின நீயே அதில் விழவேண்டிவரும். தேவனுடைய வார்த்தை உண்மை. தேவனுடைய வார்த்தை சொல்வதை அலட்சியப்படுத்தகூடாது. அதற்கு பயப்படவேண்டும். இந்த உலகத்தில் மட்டுமல்லாது அகிலலோகத்திலும் அவருடைய வார்த்தையின்படியாகவே தேவன் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

 

வேதத்தில், எஸ்தர் புத்தகத்தில் என்ன பார்க்கிறோம்? ஆமான், மொரதெகாயை கொன்றுவிட வேண்டும் என்று ஐம்பது முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டில் ஆயத்தப்படுத்தினான். ஆனால் முடிவு என்னவாயிற்று? ‘அப்படியே ஆமான் மொரதெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்’ (எஸ்தர். 7 : 10 ) படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான் என்பது எவ்வளவு உண்மையாயிற்று பாருங்கள்