“நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை” (2 கொரிந்தியர் 4:8-9).

பவுல் தன்னை மற்றவர்களை விட ஒரு மேலான நிலையில் நிறுத்திக் காண்பிக்கும்படியாகச் சொல்லவில்லை. மற்றவர்களைப் போலவே நாங்களும் நெருக்கப்படுகிறோம் என்றே சொல்லுகிறார். மெய்யாலுமே ஒரு ஊழியக்காரனின் வாழ்க்கையில் நேரிடும்படியான சோதனைகள் பல உண்டு. ஆனால் உண்மையுள்ள தேவன் அவர்களை முற்றிலும் நம்பிக்கையற்றவர்களாய் போகதக்கதாக விட்டுவிடுகிறதில்லை. நாம் நம்முடைய பெலத்திற்கு மிஞ்சி சோதிக்கப்படும்படியாக தேவன் அனுமதிக்கிறவரும் அல்ல. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான சோதனைகள், போராட்டங்கள் மத்தியிலும் கடந்துப் போனாலும் நாம் முற்றிலும் மடிந்து போகக் கர்த்தர் நம்மை அனுமதிக்கமாட்டார். மேலும் நாம் பெற்றிருக்கிற ஊழியத்தின் நிமித்தம் எந்தவிதத்திலும் மேன்மையாக எண்ணி, நம்மை உயர்த்தாதபடிக்கு, நாம் யார் என்பதை விளங்கிக்கொள்ளவும் தேவன் அநேக வேளைகளில் நமக்கு இவ்விதமான நெருக்கங்கள் துன்பங்களை அனுமதிக்கிறார். இவைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பிரயோஜனமுள்ளதாகவும், மேலும் தேவனுடைய மாறாத உண்மைதன்மை என்பது இன்றைக்கும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும் இவைகளைக் கர்த்தர் நமக்கு அனுமதித்திருக்கிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் இவைகள் நம் நன்மைக்கேதுவானவைகளே. தேவனிடத்தில் அன்புக்கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது. ஆகவே இவைகளினால் சோர்ந்துபோகாமல்  பெலன் கொண்டு வாழக் கர்த்தர் நமக்குக் கிருபை செய்கிறார்.