“அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1 பேதுரு 1:7).

கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவன் ஒரு மனிதனை எப்போது இரட்சிக்கின்றாரோ அன்றிலிருந்து அவன் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் அவர் குறிபிட்ட இலக்கை நோக்கி அவனை நடத்துகிறார். அது என்னவென்றால், தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருபதற்கு முன் குறித்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்மில் செயல்படுகிறவராக இருக்கிறார். அவர் தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றுவதில் பாடுகளை உபத்திரவங்களைக் கருவிகளாக உபயோகப்படுத்துகிறார். நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறோம் ஆனால் பாடுகளை உபத்திரவங்களைச் சந்திக்கும்போது மனம்சோர்ந்துபோகிறவர்களாய் அல்லது முறுமுறுக்கிறவர்களாய் இருப்போம். ஆண்டவர் நமக்குச் செய்த அநேக நன்மைகளை மறந்து செயல்படவும் கூடும். ஆனால் யோபு தன்னுடைய வாழ்க்கையில் மிகுந்த பாடுகளை சந்தித்த போது அவர், “நான் சோதிக்கப்பட்ட பின் பொன்னாக விளங்குவேன்” என்று சொல்லுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை தான் சந்திக்கும் பாடுகளை நேர்மறையான சிந்தையோடு எதிர்கொண்டு அதில் வெற்றியாய்க் கடந்துசெல்லவும் ஆண்டவர் உதவி செய்கிறார். பவுல், உபத்திரவங்களிலும் மேன்மை பாராட்டுகிறோம் என்று சொல்லுகிறார். ஒரு மெய்யான தேவ பிள்ளை இந்த உபத்திரவங்களிலும் தேவனுடைய கிருபையை இன்னும் அதிகம் சார்ந்துகொள்ளக் கூடிய தாழ்மையுள்ள சிந்தை அவனில் காணப்படும். அதுவே வேதம் போதிக்கின்ற கிறிஸ்தவம்.