கிருபை சத்திய தின தியானம்

 மே 5                             பரிபூரண கிருபை                 2 பேதுரு 1 : 10 – 21

“இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய

நித்திய ராஜ்யத்துக்குட்ப்படும்

     பிரவேசம் உங்களுக்கு பரிபூரணமாய் அளிக்கப்படும்”. (2 பேதுரு. 1 : 11)

      இயேசுகிறிஸ்துவினுடைய  நித்திய ராஜ்யத்திற்கு உட்படும் பிரவேசம் இல்லையென்றால் இந்த உலகில் ஒரு விசுவாசி வாழ்வது பிரயோஜனமற்றது. தேவனை அறியாத மனிதன் ஒருவன் நரகத்திற்குச் செல்வதற்குத் தேவையான அனைத்தையும் கொண்டவனாகவே ஜீவிக்கிறான். அதற்கு தனியாக அவன் செய்யவேண்டியது ஏதுமில்லை. ஆனால் அதனின்று மீட்க்கப்படும் ஒரு தேவனுடைய பிள்ளைக்கு இந்த மோட்சபாதையில் நடக்க அவனுக்கு அப்பாற்ப்பட்ட கிருபை கொடுக்கப்படவேண்டும்.

    தேவனால் இரட்சிக்கபடும்படியான ஒருவனுக்குத் தேவையான அனைத்து கிருபைகளையும் கொஞ்சமாக அல்ல, அல்லது ஒரு குறிப்பிட்ட அளவுமாத்திரமல்ல, பரிபூரணமாய் அளிக்கிறார். அவனின் இந்த ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் அவனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த உலகில் ஒரு விசுவாசி அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து கிருபைகளையும் தேவன் வாக்குப்பண்ணியிருக்கும்பொழுது இன்னும் ஏன் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் தோற்றுபோனவனாய் வாழவேண்டும்?

       நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்பொழுது, அதன் மூலம் தேவ ஆவியானவர் நம்மோடு பேசுகிறார். நாம் ஜெபிக்குபொழுது தேவன் ஜெபத்தை கேட்டு உன்னத பதிலளிக்கிறார். ஆபத்து வேளையில், இக்கட்டு காலங்களில் தேவன் நம்மோடு கூட இருந்து இரட்சிப்பதாக வாக்கு அருளியிருக்கிறார். நம்மை முற்றும் முடிய இரட்சிப்பேன் என்று தம்முடைய வார்த்தையில் உறுதியளித்திருக்கிறார். அன்பான சகோதரனே! சகோதரியே! இவ்வளவான தேவ ஆசீர்வாதம் நமக்கு இருக்கும்பொழுது நாம் சோர்ந்து போகாமல் முன்னேறுவோமாக. நாம் என்றும் சிசுவாசத்தில் உறுதிப்பட்டு முன்னேறிச்செல்வோமாக. தேவன் நம்மை கைவிடாதிருப்பேன் என்று சில்லியிருக்கிறாரே.