“ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது” (ஏசாயா 34:1).

ஏசாயாவின் மூலமாக தேவன் இவ்விதமாய் அழைக்கிறார். இந்த உலகத்தில் ஒருவர் மாத்திரமே எல்லாவற்றிற்கும் அதிபதியானவர், அவர் தேவாதி தேவன். அவரிடத்தில் நாம் கேட்கும்படியாக கிட்டிச்சேர வேண்டுமென்று அழைக்கிறார். மேலும் நாம் கவனத்தோடு அவருக்குச் செவிக்கொடுப்பது அவசியம். ஏனென்றால் தேவன் பேசுகிற அவருடைய வார்த்தைகள் நித்தியமானவைகள். இந்த உலகத்தில் தேவனுடைய வார்த்தை மட்டுமே சகல அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டது. தேவனுடைய வார்த்தைக்கும் தேவனுக்கும் கீழ்ப்படிந்து நடப்பதே இந்த சிருஷ்டிப்பின் நோக்கமாயிருக்கிறது. இந்த தேவனுடைய அழைப்பை நிராகரிக்கும் பொழுது அதின் விளைவு பயங்கரமானது என்பதை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். “சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது” (ஏசாயா 34:2). ஆனால் அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். அவருடைய கோபத்திற்கு முன்பாக யார் நிற்கக் கூடும்? தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம். அதுவே நம்முடைய வாழ்க்கையின் பாதுகாப்பிற்கு ஏற்ற வழிமுறையும் ஏற்ற இடமுமாயிருக்கிறது. தேவனிடத்தில் தன்னைத் தாழ்த்துகிறவர்களை அவர் கிருபையாய் உயர்த்துகிறார். காத்துக்கொள்கிறார். அவரையே கிட்டிச்சேருவோமாக.