டிசம்பர்  18                                            

“அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்” (ஆதி 28 : 19)

     பெத்தேல் என்பதற்கு தேவனுடைய வீடு என்று அர்த்தம். ஆம்! யாக்கோபு தன் சொந்த தேசத்தை விட்டு தனித்தவனாய் தன் மாமன் லாபானிடத்தில் செல்லும் பாதையில் இரவில் படுத்து நித்திரை செய்தான். கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின் கீழ் வைத்து நித்திரை செய்த வேளையில் ஒரு சொப்பனங்கண்டான். ’இதோ’ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது. அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவ தூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: உனக்குள்ளும், உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.; (ஆதி 28 : 12, 14, 15)

    யாக்கோபு தேவனால் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். ஆம்! பெத்தேலில் அவன் தேவனையும் தேவ தூதர்களையும் கண்டான். தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றான். ஆனாலும் அவன் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. தேவன் ஒருவேளை உங்களை அநேக ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதித்திருக்கலாம், ஆனால் நீ இரட்சிக்கப்படாதிருப்பாயானால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

   இரட்சிக்கப்படுவதற்கு பெனியேலின் அனுபவம் யாக்கோபுக்குத் தேவையாயிருந்தது. ஆம்! பிறகு 20 வருடங்கள் கழித்து தன்  சொந்த தேசம் திரும்பி வரும்போது அவன் எல்லாவற்றையும் அக்கரைப்படுத்தி தேவனிடத்தில் தனித்திருந்தான். (ஆதி 32 : 23,24). அவனுடைய பேர் என்ன என்று தேவதூதன் கேட்டபொழுது “யாக்கோபு” (எத்தன், ஏமாற்றுக்காரன்) என்பதை ஒத்துக்கொண்டான்.அப்பொழுது தேவன் அவனை இரட்சித்தார். இஸ்ரவேல் என்ற புதிய பெயரைக் கொடுத்தார். இதுதான் மெய்யான இரட்சிப்பு. இன்றைக்கு அநேகருக்கு பெத்தேலின் அனுபவம் உண்டு  பெனியேலின் அனுபவம் இல்லை. உனக்கு பெத்தேலின் அனுபவம் போதாது, பெனியேலின் அனுபவம் தேவை.