கிருபை சத்திய தின தியானம்

 ஜுலை 17                       மெய்வெளிச்சத்தின் பாதை             யோவான் 16:1–15

“சத்திய ஆவியாகிய அவர் வரும்போது,

சகல சத்தியத்திற்குள்ளும்  உங்களை நடத்துவார்” (யோவான் 16:13)

            இந்த உலகத்தில் நாம் கண்களிருந்தும் குருடர்களாகவேயிருக்கிறோம். பாவசுபாவத்தின் தன்மையுள்ளவர்களாகிய நாம் பாவ வழியில் நடப்பதையே தெரிந்து கொள்ளுகிறோம். இந்த பாவ வழி நம்மை எப்போதும் சமாதானமற்றவர்களாய் வாழச்செய்கிறது. முடிவில் நம்மை நரகத்தில் அமிழ்த்திவிடுகிறது. ஆனால் இவ்விதமான விழுந்து போன மனிதனுக்குத் தேவன் இந்த மகாபெரிய வாக்குத்தத்ததின் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். நாம் சத்திய வழியில் நடப்பதே மெய்யான சமாதானத்தின் பாதை அல்லவா! அது விடுதலையின் வழியாகவும் இருக்கிறது. ஏனென்றால், சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று தேவன் சொல்லியிருக்கிறார். அன்பான சகோதரனே! சகோதரியே! நீ மெய்யாலும் சத்திய வழியை வாஞ்சிக்கிறாயா? அப்படியானால் உனக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறது என்பதை மறந்துவிடாதே.

            அதற்கு முதலாவது நீ இரட்சிக்கப்பட வேண்டும். தேவனிடத்தில் நீ உன்னுடைய பழைய வாழ்க்கையை அறிக்கையிட்டு அவரோடு ஒப்புரவாக வேண்டும். தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று அந்த ஆயக்காரனைபோல் உண்மையான இருதயத்தோடு ஜெபி. அந்த ஆயக்காரனை இரட்சித்த தேவன் உன்னையும் இரட்சிப்பார். ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்போது பரிசுத்த ஆவியானவர் அவனில் வந்து வாசம்பண்ணுவார். ‘நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தைக் கேட்டு , விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்’. (எபேசியர் 1 : 13). நீ இரட்சிக்கப்படுவதற்கு முன்பு வேதத்தை வாசிப்பதற்கும், இரட்சிக்கப்பட்ட பின்பு வேதத்தை வாசிப்பதற்கும் மிகுந்த வித்தியாசம் காணப்படும். நீ இரட்சிக்கப்பட்ட பின் தேவ ஆவியானவர் தம்முடைய வசனத்தை உணர்த்தி வழிநடத்துவார். கீழ்ப்படிய உணர்வையும் பெலனையும் தருவார். இருண்ட பாதையில் நடந்த கிறிஸ்தவனுக்கு இதுவே மெய்வெளிச்சமான பாதை.