“ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபி 11 : 10)
ஆபிராமைக்குறித்து தேவனுடைய வார்த்தை இவ்விதம் சொல்லுகிறது. அவன் மேலான நகரத்திற்காகக் காத்திருந்தான். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் மேலானவைகளை அல்ல கீழானவைகளையே வாஞ்சிக்கிறார்கள். உன்னுடைய வாஞ்சை எப்படி இருக்கிறது? அவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அவன் இலக்கும், நோக்கமும் எப்படியிருந்தது பாருங்கள். அது சாதாரணமானதல்ல, மகிமையானது. தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரம். அதின் மேன்மையும் உன்னத மகத்துவத்தையும் அறியாததினால்தான் நீ அவைகளைக் குறித்து சிந்திப்பதில்லை, வாஞ்சிப்பதில்லை.
ஒரு மெய் கிறிஸ்தவன் அந்த மேலான நகரத்தை நோக்கி ஓடுகிற ஓட்டத்தில், இந்த உலகத்தில் அதற்கு ஏற்ற வண்ணமாக எல்லா காரியங்களையும் நிதானித்து செய்கிறவனாகக் கானப்படுவான். அவன் எல்லாவற்றிலும் விசுவாச சிந்தை உள்ளவனாக தீர்மானிப்பான். இவ்வுலகமும், உலகத்தின் மேன்மையும் அவனுடைய இலக்கல்ல. ஆபிரகாமைக்குறித்து மேலும் என்ன சொல்லுகிறது? விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே, பரதேசியைப் போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும், யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான். (எபி 11 : 9)
உங்களுக்கு மெய்யாலும் நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை உண்டா? இன்றைக்கு கிறிஸ்தவர்களை இவ்விதமாக பிரிக்கலாம். 1. நித்திய சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள் 2. உலக சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள். நித்திய சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்: நித்திய சிந்தையுள்ளவர்கள் நித்தியத்துக்கு அடுத்த காரியங்களில்,ஆவிக்குரிய காரியங்களில் கரிசனையும் அக்கரையும் உள்ளவர்களாய் வாழுவார்கள்.உலக சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்: உலக சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவன் என்ற பெயரை கொண்டிருப்பார்கள். ஆனால் செயல்பாட்டிலோ உலகத்துக்கடுத்த காரியங்களில் தீவிரமாய்க் காணப்படுவார்கள். இவர்கள் பக்தி, பக்திவேஷம் போலியானது.