“கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்” (சங்கீதம் 28:7).

          சங்கீதக்காரனுடைய மகிழ்ச்சியை இங்கு முழு நிறைவோடு நாம் பார்க்கிறோம். கர்த்தர் நம்முடைய பெலன், கேடகம். நாம் இந்த உலகத்தில் கர்த்தரை மட்டுமே நம்முடைய பலனாக கொண்டு வாழ்வதைப் போன்று ஆசீர்வாதமான காரியம் எதுவுமில்லை. கர்த்தர் நமக்கு கேடகமுமாயிருக்கிறார், நமக்கு நேரிடும் பல எதிரான ஆபத்தான தாக்குதல்கள் சூழ்நிலைகளுக்கு நம்மைப் பாதுகாக்கிறவராக இருக்கிறார். எவ்வளவு அருமையான தேவன் அல்லவா! நம்முடைய வாழ்க்கையில் நம் இருதயம் யாரை நம்பி இருக்கிறது? இந்த இடத்தில் சங்கீதக்காரன் ‘என் இருதயம் அவரை நம்பியிருந்தது’ என்று சொல்லுகிறார். நாம் மெய்யாலுமே நம் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருக்கிறோமா? நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் அவரே இரட்சகராக, மீட்பராக, ஆண்டவராக வழிநடத்துபவராகக் காணப்படுகிறாரா?

அல்லது கஷ்டங்கள், பாடுகள், உபத்திரவங்களை நீக்கவும், வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை பெறவும் மாத்திரமே அவரை நம்புகிற கூட்டமாக நாம் இருக்கிறோமா? அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் இரட்சிப்பின் நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. இரட்சிப்பின் நம்பிக்கை உள்ள ஒரு மனிதனுடைய இருதயத்தில்  களிகூறுதல் காணப்படும். அந்த இருதயத்தில் மெய்யான சந்தோஷத்துக்குரிய நிறைவுகளை  வாழ்க்கையில் அனுபவிக்க ஆண்டவர் உதவி செய்கிறார். ஆகவே நம்முடைய பலம் கர்த்தர் மட்டுமே. நாம் அவரை மட்டுமே சார்ந்து, அவருடைய இரட்சிப்பின் நம்பிக்கையைப் பெற்று வாழவேண்டும். இதுபோன்ற ஆசீர்வாதமான வாழ்க்கை வேறெதுவுமில்லை. கர்த்தரை நாம் நம்பி இருக்கும் பொழுது நாம் ஒருக்காலும் வெட்கப்பட்டுப் போவதில்லை. மெய்யாலும் நம்முடைய இருதயம் களிகூறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. அவ்விதமாக நாம் கர்த்தரை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.