கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 30                      குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது                   பிலி 3:1-21

“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து

கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர்

வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்”(பிலி 3:20).

         பவுல் இங்கு நம்முடைய குடியிருப்பு இருக்கும் என்று சொல்லவில்லை. மாறாக இருக்கிறது என்று சொல்லுகிறார். ஒரு கிறிஸ்தவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் கூட அவனுடைய குடியுரிமை இந்த உலகத்திற்குரியதாக இல்லை. அது பரலோத்திற்குரியது. ஏனென்றால், பவுல், 2 கொரி 4:18 –ல் “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” என்று சொல்லுகிறார். இந்த உலகத்தின் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாகக் காணப்பட்டாலும், அது அநித்தியமானது என்பதை மறந்துவிடாதே. நம்முடைய நிலையான வீடு பரலோகமே என்று அறிந்துகொள்ளவேண்டும்.

      இன்னுமாக பவுல்  2 கொரி 5:1 –ல், “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்” என்கிறார். இது அழியாத நித்திய வீடு. ஒரு இரட்சிக்கப்பட்ட பாவிக்கு இது தான் நிலையான வீடு. பூமிக்குரிய வீடு எவ்வளவு அழகானதாக, மேன்மையானதாக அஸ்திபாரம் போட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் அது அழிந்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

      இன்னுமாக நம்முடைய வாஞ்சை இந்த உலகத்தோடு ஒத்துபோகிறதாக இருக்கக்கூடாது. பவுல்  2 கொரி 5:8 –ல் “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” என்று சொல்லுகிறார். நம்முடைய விருப்பம் பரலோகத்தின் மேலேயே காணப்படவேண்டும். நம்முடைய விருப்பம் தேவனோடு என்றென்றும் உறவாடிக் கொண்டிருக்கும்  ஐக்கியமாக இருக்கவேண்டும். ஆகவேதான் பவுல், “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” (கொலோ 3:2) என்று சொல்லுகிறார். மேலானவைகளை நாம் தேடுவோம், மேலானவைகளை நாம் வாஞ்சிப்போம், நம் இருதயம் மேலானவைகளையே அதிகமாக நாடட்டும். அது நிலையானது, நித்தியமானது, மகிமையானது. உன் இருதயம் எதை வாஞ்சிக்கிறது? சிந்தித்துப்பார்