ஜனவரி 24

“உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்” (சங்கீதம் 81:10).

தேவன் சொல்லுகிறார், நீ எந்தளவுக்கு உன் வாயை விரிவாய்த் திறக்கின்றாயோ, அந்தளவுக்கு நான் அதை நிரப்புவேன் என்று. அநேகச் சமயங்களில் நாம் நம்முடைய வாயை விரிவாய் திறக்கப் பயப்படுகிறோம். ஒருவேளை ஆண்டவர் அந்தளவுக்கு செய்யக்கூடுமோ என்று நினைக்கின்றோம். ஆண்டவர் செய்வாரா என்றும் பலவிதமான சந்தேகங்களைக் கொண்டவர்களாய் காணப்படுகின்றோம். ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், உன் வாயை எந்தளவுக்கு விரிவாய்த் திறக்க முடியுமோ அந்தளவுக்கு விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன் என்று. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு” (எபேசியர் 3:20) என்று வேதம் சொல்லுகிறது.  மெய்யாலுமே தேவன் நம்முடைய வாழ்க்கையில் அவ்விதமாகவே செய்ய வல்லவராய் இருக்கிறார். “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). ஆகவே நாம் சந்தேகப்படாமல் கர்த்தரிடத்தில் பெரியக் காரியங்களைக் கேட்போமாக. பெரியக் காரியங்களை எதிர்பார்போமாக. அப்பொழுது ஆண்டவர் அதை நமக்குச் செய்வார். வில்லியம் கேரி என்ற தேவ மனிதர் “தேவனிடத்தில் இருந்து பெரியக் காரியங்களை எதிர்பார், தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்” என்று சொன்னார். தேவனிடத்திலிருந்து நாம் பெரியக் காரியங்களை எதிர்பார்க்காமல் பெரியக் காரியங்களைச் செய்ய முடியாது. நம்முடைய வாழ்க்கையில் நாம் பெரிய காரியங்களை பெற்றக்கொள்வதின் மூலமாகவும், பெரிய காரியங்களை எதிர்பார்பதின் மூலமாகவும் இன்னும் கர்த்தரை நாம் மேன்மைபடுத்துவோமேயன்றி தேவனை நாம் கனவீனப்படுத்த மாட்டோம். ஆகவே அவ்விதம் வாழ தேவன் நமக்கு உதவி செய்வராக.