கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட்  3           ஒரே பேறான குமாரன்          யோவான்  3 : 10 – 20

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ

அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,

அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”(யோவான் 3:16)

     தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உன்னதமானவைகள். வேதத்தில் ஆங்காங்கே அவைகள் பளிச்சிடுகின்றன. அவைகள் நமக்கு பெரிய நம்பிக்கையூட்டும், வெளிச்சங்களாக இருக்கின்றன. இந்த வாக்குத்தத்தம் தேவனின் பரந்த உயர்ந்த அளவுகளைக் கொண்டதாயிருக்கின்றது.

     ‘ஒரே பேரான குமாரன்’ ஆம்! ஆண்டவராகிய இயேசு சிறப்பு வாய்ந்தவர், விலையேறப்பெற்றவர் தேவாதி தேவக்குமாரன். பிதாவானவர் குமாரனுக்கும், குமாரன் பிதாவுக்கும் விலையேறப்பெற்றவர். பரிசுத்த ஆவியானவரும் அப்படியாக ஒருவருக்கொருவர் விலையேறப்பெற்றவர். ஆனால் இந்த விலையேறப்பெற்ற தேவக்குமாரனே மனிதனின் மீட்புக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், அதைக்காட்டிலும் இந்த மனிதனுக்கு கொடுக்கக்கூடிய சிறந்தது ஒன்று உண்டோ? இருக்க முடியுமா? சிறந்தவைகளில் மிகச்சிறந்தவர் இந்த தேவக்குமாரன்.

     ‘விசுவாசிக்கிறவன் எவனோ’ இந்த தேவக்குமாரனை விசுவாசிக்கிறவன் எப்படிபட்டவனாயிருந்தாலும் சரி, இந்த உலகில் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் சரி. எந்த தேசம், நிறத்தவனாக இருந்தாலும் சரி, மனிதனில் மிக மிக மோசமானவன் என்று கருதப்படுகிறவனாயிருந்தாலும் சரி, படித்தவன் படிக்காதவன் என்று இந்த உலகில் இருக்கிற அனைத்து வித்தியாசத்துக்குரியவனாக இருந்தாலும் அவன் விசுவாசிப்பானானால், நித்திய ஜீவனை அடைவான், அழிந்து போகமாட்டான்.

     ‘இவ்வளவாய் அன்புக் கூர்ந்தார்’ தேவ அன்பை இந்த உலகில் ஒருவரும் கணக்கிடமுடியாது. இது கடலிலும் அதிகம். இந்த பரந்த வானிலும் அதிகம். இந்த அன்பில் நிலைத்திருப்பதே நமக்கு சிறந்த பாதுகாப்பு. அன்பானவர்களே! தேவனின் பொக்கிஷம் பரந்தது. அதை ஒருவனும் தீர்க்கமுடியாது. நீ உன்னாலான மட்டும் சுதந்தரித்துக்கொள்.