“நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ?” (யோபு 34:17).

இந்த இடத்தில் தேவ நீதியைக் குறித்து சொல்லப்படுகிறது. தேவனுடைய வழியை, அவருடைய சித்தத்தை அவருடைய ஆளுகையின் கீழ் தன்னை உட்படுத்துகிறதை விரும்பாத ஒரு மனுஷன் இந்த உலகத்தில் வாழக்கூடுமோ? இன்றைக்கு தேவனை அறியாத அநேக மக்களைப் பார்த்து அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மையில்லை. இந்த உலகத்தில் தேவன் இல்லாமல் வாழுகிற ஒரு வாழ்க்கை என்பது இந்த உலகத்திலும் சமாதானமான ஒரு வாழ்க்கையாக இருப்பதில்லை. நித்தியத்தில் அந்த மனிதனுக்கு நம்பிக்கை என்பது கிடையாது. தேவனோடு உறவில்லாத ஒரு மனிதனுக்கு சமாதானம் இல்லை. தேவன் இல்லாமல் அவன் வாழ்க்கையில் பெற்றிருக்கும் அனைத்தும் வெறுமையானது. ஒருவேளை அவர்களைத் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கலாம், ஆனாலும் அவனுடைய எல்லாக் காரியங்களும் தேவனுக்கும் அவருடைய நீதிக்கும் ஏற்புடையதாக இல்லாதபொழுது அவைகள் பாவச் செயல்களாகவே காணப்படும். அவன் எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் தேவனைத் தேடாமல் போனால் அவனைப் போல மதிகேட்டவன் ஒருவன் உண்டோ? இந்த உலகத்தில் ஒரு மனிதன் தேவன் இல்லாமல் எவ்வளவு தான் பெற்றிருந்தாலும் அது வீண். நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்கே எல்லா கனத்தையும் மகிமையும் செலுத்தக் கற்றுக்கொள்ளுவோம். நாம் பெற்றிருக்கிற கொஞ்சத்திலும் திருப்தியாய் வாழக் கற்றுக்கொள்வோம். அது தேவனுக்குப் பிரியமானது.