மார்ச் 7     

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”(யோவான் 3:16).

ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பைக் குறித்துச் சிந்திக்கும்பொழுது முற்றிலும் தகுதியற்ற என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அன்பா? பாவத்தின் உழையான சேற்றில் மூழ்கி தவித்துக் கொண்டிருந்த நிலையில், ஆண்டவருடைய அன்பு என்னை சந்தித்து மீட்டு விடுதலையாக்கிற்று. தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனைக் கொடுத்ததின் நிமித்தமாக இவ்வளவு பெரிய ஒரு ஆவிக்குரிய சிலாக்கியதிற்கு உரியவர்களாய் நாம் காணப்படுகிறோம். இல்லையென்றால் இந்த உலகத்தில் நம் பாவத் தன்மையின் நிமித்தமாக அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்போம் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. இயற்கையாக நாம் பாவத்தை மேற்கொள்ளக்கூடிய  தன்மையுள்ளவர்கள் அல்ல. ஆனால் இது அவருடைய அளவில்லாத கிருபை. மெய்யாலுமே இந்த அன்பை எண்ணிப்பார்க்கும்பொழுது, முழு இருதயத்தோடு தேவனில் அன்புகூற நம்மை வழிநடத்துகிறது. முழு  இருதயத்தோடும் முழு பெலத்தோடும் முழு மனதோடும் முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூர நாம் கடனாளியாக இருக்கிறோம். ஆனால் அதே சமயத்தில் ஆண்டவரை அறியாத சகோதரரிடத்திலும் அன்புகூர நாம் கடனாளியாயிருகிறோம் என்று வேதத்தில் பார்க்கிறோம். தகுதியில்லாத நம்மைத் தேவன் நேசித்திருப்பார் என்றால், மற்றவர்களையும் நாம் அவ்விதமாகவே நேசிக்க வேண்டும். அவர்களுக்காக நாம் எந்தளவுக்கு பாரமுள்ளவர்களாகக் காணப்படுகிறோம்? ஏனென்றால் நரகம் என்பது தேவனுடைய முழு கோபாக்கினையும் வெளிப்படுத்தப்படுகிற ஒரு இடம். தேவனுடைய அன்பை ருசிக்கிறவர்கள் மற்றவர்களுக்காகப் பாரமான உணர்வோடு ஜெபிப்பது மிக மிக முக்கியமானது. அவ்வாறு நாம் ஜெபிக்கவில்லை என்றால் நாம் நம்முடைய கடமையில் தவறுகிறோம். ஆண்டவருக்காக அர்ப்பணிப்பது என்பது அவருடைய நாமத்தின் மகிமைக்கென்று வாழுகிற ஒரு வாழ்க்கை ஆகும். அவ்விதமான ஒரு வாழ்க்கையை தேவன் நமக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பாராக.