“ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை” (சங்கீதம் 49:16-17).

 இன்றைக்கு எத்தனையோ ஐஸ்வரியவான்கள் மிகப் பிரமாண்டமானக் காரியங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைக் குறித்துப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் இந்த உலகத்தில் எவ்வளவோ பிரயாசப்பட்டு அநேகக் காரியங்களைச் சேர்த்தாலும், அவன் மரிக்கும்போது வெறுமையாகவே போகிறான். இன்றைக்கும் ஐஸ்வரியவான்கள் மரிக்கும்போது அநேகர் அவர்களைக் குறித்துப் புகழ்கின்றதைப் பார்க்கிறோம். ஆனால் அவனின் உண்மையான முடிவைக் குறித்து 19ஆம் வசனத்தில் பார்க்கும்பொழுது “அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.” நரகத்தைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது அது மிக பயங்கரமானது. இருள் நிறைந்த நித்தியமான ஒரு ஆக்கினை அது.  மேலும் 20 ஆம் வசனம் “கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.” அவன் மற்றவர்களால் அறிவைப் பெற்றவன் என்று சொல்லப்பட்டாலும், அவன் மெய்யாலுமே ஒரு மிருகத்திற்கு ஒப்பாகவே இருக்கின்றான். அவனால் ஒன்றும் பிரயோஜனமில்லை. அவன் தன் ஆத்துமாவைத் தானே ஏமாற்றிக் கொள்ளுகிறான். தன்னை சிருஷ்டித்த தேவனை அறியாமல், அவருடைய இரட்சிப்பை அறியாமல் மரித்துப் போவதே பரிதாபம்.