“என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்” (புலம்பல் 2:11).

எரேமியா இஸ்ரவேல் மக்களின் நிலையைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறதைப் பார்க்கிறோம். எந்தளவுக்கு அவருடைய வாழ்க்கையில் அந்த மக்களைக் குறித்த ஆத்தும பாரம் காணப்படுகிறது! நம்முடைய வாழ்க்கையில் அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த பாரம் இருக்கின்றதா? தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொல்லுகிற நம்முடைய வாழ்க்கையில் அழிந்து போகிற மக்களுக்காக தேவனுக்கு முன்பாக நாம் பரிதபிக்கின்றோமா? அருமையானவர்களே இந்த உலகம் பாவத்தினால் அழிந்து கொண்டிருக்கிறது. அநீதியும் பாவ வழியும் இந்த உலகத்தில் அதிகம் காணப்படுகிறது. உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கின்றது என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் திறப்பில் நின்று அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கிறவர்கள் இன்றைக்கு எங்கே? தேவன் இப்பொழுதும் நம்மை அவ்விதமாக அழைக்கிறார். உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய இந்த அழைப்பிற்கு ஒப்புக்கொடுப்பாயா? ஜெப வாழ்க்கையில் மற்றவர்களுக்காக ஜெபிக்கக் கூடியவர்களாக உங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பீர்களா? நிச்சயமாக தேவன் மிகப் பெரியக் காரியங்களைச் செய்வார். நம்முடைய ஆத்தும பாரம் தேவனைக் கனப்படுத்துகிறது.