கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 8                              முதிர்வயது                                     சங் 71: –9

முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும்,

என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” (சங் 71:9)

     முதிர்வயதைக்குறித்து அநேகர் பயப்படுகிற நாட்களில் நாம் வாழுகிறோம். இன்றைக்கு சொந்த பிள்ளைகளும் தங்களை முதிர்வயதில் பராமரிப்பார்களோ என்று அச்சப்படுகிறார்கள். முதிர்வயதில் மற்றவர்கள் தங்களை மதிப்பார்களோ, உண்மையாய் நேசிப்பார்களோ என்ற அச்சம். மெய்தான் அநேகர் நன்றாக வாழ்ந்த நாட்களில் மதிக்கப்பட்டவர்களாய் இருந்தும், முதிர்வயதின் நாட்களில் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். இவ்விதமான அம்சங்கள் சூழ்ந்த நிலை. ஒரு வேளை சங்கீதக்காரனும் இவ்விதமான அச்சத்தினால் பிடிக்கப்பட்டு தேவனை நோக்கி இந்த ஜெபத்தை ஏறெடுத்திருக்கலாம்.

    தேவனும் மனிதர்களைப்போல செயல்படுவாரா? முதிர்வயதில் தள்ளிவிடுவாரா? பெலன் ஒடுங்கிப்போன வேளையில் தள்ளிவிடுவாரா? வேதம் என்ன சொல்லுகிறது? தேவன் மனிதனைப்போல அல்ல. தேவன் ஆரம்பத்திலிருந்து முடியும்மட்டும் தாங்குகிறவர். நடுவில் கைவிடுகிறவர் அல்ல, கடைசிமட்டும் காக்கிறவர். ‘தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்……. இனிமேலும் நான்  ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.’ (ஏசாயா 46:3,4). அன்பானவர்களே! தேவன் உங்களை ஏந்திச் செல்வார், சுமப்பார், பயப்படாதேயுங்கள். மனிதர்கள் உங்களைக் கைவிடலாம். தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.

    முதிர்வயதிலும், உங்களால் முடியும்வரை தேவனுடைய ஆலயத்தை தேடுங்கள். “கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டாப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்” (சங் 92:13). என்கிறார். மேலும் தேவன் முதிர்வயதில் அவர்களை பிரயோஜனமற்றவர்களாக எண்ணுகிறாரா? இல்லை, மற்றவர்கள் அவ்விதம் எண்ணலாம். ஆனால் தேவன்  சொல்லுகிறார், “அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து ,புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (ச ங் 92:15). எக்காலத்திலும் கர்த்தரை நம்புங்கள்.