ஏப்ரல் 11         

“புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே” (கலாத்தியர் 3:1).

பவுல் கலாத்தியர் திருச்சபை மக்களைப் பார்த்து இந்த கேள்வி கேட்பது இந்தகாலத்திற்குப் மிக பொருத்தமான ஒரு காரியமாக இருக்கிறது. இன்றைக்கு சத்தியத்திற்கு கீழ்ப்படியக்கூடிய வாஞ்சை நம்முடைய வாழ்க்கையில் இருக்கிறதா என்பதைக் குறித்து நாம் தற்பரிசோதனை செய்வது மிக நல்லது. இந்த காலம் சத்தியத்தை விட்டு விலகிப்போன ஒரு காலமாக இருக்கிறது. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மத்தேயு 24:24)  என்று சொல்லப்படுகிறது.

இரண்டு காரியம் இன்றைக்கு நமக்கு முன்பாக இருக்கிறது. ஒன்று இந்த வேதத்தை மாத்திரமே சார்ந்து வாழ்க்கூடிய ஒரு விசுவாச வாழ்க்கை. அது விசுவாசத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கை. இன்னொன்று தரிசித்து வாழும்படியான ஒரு வாழ்க்கை. இன்றைக்கு அநேக மக்கள் சத்தியத்தைச் சார்ந்து விசுவாசத்தின் அடிப்படையில் வாழ்வதைவிட, தங்கள் கண்களுக்கு முன்பாக பல அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்டு அதனடிப்படையில் வாழும்படியாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் இது சரியா? இல்லை. ஆகவேதான் பவுல் கலாத்தியருக்கு எழுதும்பொழுது ‘புத்தியில்லாத காலத்தியரே’ என்று அவர்களை கடிந்து கொண்டு எழுதுகிறதைப்  பார்க்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் சத்தியத்தை எந்த அளவுக்கு பற்றிக்கொள்ள நாம் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து நம்மை நாமே சோதித்துப் பார்ப்பது நல்லது. சத்தியத்தின் அடிப்படையில் நம்முடைய விசுவாச வாழ்க்கையைக் கட்டுகிறோமா அல்லது பலவிதமான அடையாளங்கள், அற்புதங்களை மட்டுமே நாம் எதிர்பார்த்து அதனடிப்படையில் நாம் வாழ்கிறோமா என்பதை நாம் இந்த காலங்களில் அதிகமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று சத்தியம் குறைந்துபோன காலமும், சத்தியம் போதிக்கப்படாத ஒரு காலமுமாக  இருக்கிறது. நாம் சத்தியத்தின் அடிப்படையில் வாழுகிற கிறிஸ்தவர்களாக காணப்பட தேவன் நமக்கு உதவி செய்யும்படியாக அவரைச் சார்ந்து கொள்வது நல்லது.