ஏப்ரல் 14     

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2).

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த இந்த உன்னதமான வாக்குத்தத்தத்தை நாம் எண்ணும் பொழுது தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஒரு தனி மனிதனை அழைத்து ஒரு பெரிய ஜாதியாக்கி அவனுடைய வாழ்க்கையை உலகத்திற்கு ஆசீர்வாதமாக தேவன் மாற்றினார். ஆனால் ஆண்டவர் அவன் வாழ்க்கையில் கீழ்ப்படிதலை எதிர்பார்த்தார். அநேகருடைய வாழ்க்கையில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஆசீர்வாதத்தை மாத்திரமே விரும்புகிறது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருக்கு கீழ்ப்படிவதை தெரிந்து கொள்வதைப் போன்று ஆசீர்வாதமான காரியம் என்னவாக இருக்க முடியும்.

அநேகருடைய வாழ்க்கையில் தங்கள் சொந்த விருப்பங்களையும், எண்ணங்களையும் நிறைவேற்றுவதில் மட்டுமே விரும்பி செயல்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவர் தங்கள் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து அவருக்கு கீழ்ப்படிவதைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆகவே அவர்களுடைய வாழ்க்கையில் தேவன் அவர்களை உருவாக்குவதற்கும், அவர்களை உயர்த்துவதற்கும் அவர்களே தடையாய் இருக்கிறார்கள். ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கையில் தேவனுக்கென்று தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, தன்னுடைய இனத்தையும் தேசத்தையும் விட்டு ஆண்டவருடைய வழிநடத்தலுக்கு தன்னை அர்ப்பணித்தான். நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைப் போன்ற ஆசீர்வாதமான வாழ்க்கை வேறெதுவுமில்லை. கீழ்ப்படிதல் நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தின் திறப்பையும், மதகை திறந்து நம்மை ஆசீர்வாதம் உள்ளவர்களாக மாற்றும் என்பதை அறிந்து கொள்வோமாக.