அக்டோபர் 24
‘இங்கே எங்களிடத்தில்; ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை என்றார்கள்’ (மத் 14:17)
பட்டணங்களிலிருந்து கால் நடையாய் இயேசுவினிடத்தில் வந்த திரளான ஜனங்களைப் பார்க்கிறோம். சாயங்காலமாகிவிட்டது இடமோ வனாந்திரமான இடம். இந்த நேரத்தில் என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த சீஷர்கள். அருமையானவர்களே! எல்லாம் எதிரிடையாய் காணப்பட்டது. கால் நடையாய் வந்திருந்து களைத்துப்போன மக்களை எப்படி போஷிப்பது.
நம்முடைய வாழ்க்கையில் அநேக நேரங்களில் எல்லாம் எதிரிடையாய்ச் செயல்படுவது போல இருக்கின்றன. ஒன்றுக்கு மேல் ஒன்று பிரச்சனையாகதான் இருக்கிறதே ஒழிய தீர்வு கிட்டுவது போல் இல்லை. என்ன செய்வது என்பதைக் குறித்து திகில்! நம்பிக்கையற்ற நிலை. குழப்பமான சூழ்நிலை. நாம் அனைவரும் அநேக சமயங்களில் இவ்விதமாய்க் காணப்படுகிறோம். ஒரு வேளை இன்று இதைப்போலவே உன் நிலையும் இருக்கலாம்.
அப்பொழுதுதான் இந்த சீஷர்கள் ஒரு தவறு செய்கிறார்கள். அது என்ன தவறு? ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் இதற்காக ஆலோசனைக் கேட்காமல் இயேசுவுக்கு ஆலோசனை சொல்லுகிறார்கள். இன்று நீயும் அவ்விதமாகத்தான் நடந்துக்கொள்கிறாய். உன்னுடைய இக்கட்டான வேளையில், ஆண்டவரே! ‘நான் என்ன செய்யட்டும்’ என்று கேட்ப்பதில்லை. நீ உன்னுடைய ஆலோசனையை ஆண்டவருக்குக் கொடுக்கிறாய் இது தவறு.
அந்த சீஷர்கள் இதைத்தவிர வேறொன்றுமில்லை என்று சொன்னபோதுதான் அற்புதத்தைக் கண்டார்கள். உன் வாழ்க்கையிலும் அது எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அதை இயேசுவினிடம் கொடு. அவர் அதை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார். குறைவைக்குறித்து அங்கலாய்க்காதே. இருப்பதை இயேசுவினிடத்தில் கொடுக்க கற்றுக்கொள். தேவன் அதன் மூலம் பெரிய காரியங்களைச் செய்வார். அவ்விதம் சீஷர்கள் ஒப்புக்கொடுத்தபோது நிறைவைக் கண்டார்கள். ஜனங்கள் அனைவரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்களாய், திரும்பிச் சென்றார்கள். குறைவைப் பற்றி கவலைப்படாதே. இயேசுவின் கரத்தில் கொடு. நிறைவைக் காண்பாய்.