“எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்” (2 நாளாகமம் 32:25).

எசேக்கியா யூதாவின் ராஜா. அவனுடைய வாழ்க்கையில் ஆண்டவர் எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். அசீரியா ராஜாவாகிய சனகெரிப் அவனுடைய தேசத்தைப் பிடிக்க, அவனுக்கு எதிராய் செயல்பட்டான். ஆனாலும் தேவன் எசேக்கியாவின் பக்கமாக நின்று தம்முடைய தூதனைக் கொண்டு அவர்களை அழித்துப்போட்டார். எசேக்கியா தன் வாழ்நாட்கள் கூட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஜெபித்தபொழுதும் கர்த்தர் அவனுக்கு இரங்கினார். 15 ஆண்டுகள் அவன் வாழ்நாட்களைக் கூட்டிக்கொடுத்தார். ஆனாலும் ஆண்டவர் தனக்குச் செய்த உபகாரத்திற்குத்தக்கதாய் நடக்கவில்லை. காரணம் அவன் மனமேட்டிமையானான். இந்த உலகத்தில் மிகப் பெரிய பாவம் பெருமை. நம்முடைய வாழ்க்கையில் நம் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக்கொள்வது மிக அவசியம். ஏனென்றால் பெருமை நம்மில் மிகச் சீக்கிரத்தில் வந்து நம்மை அழிவுக்கு நேராக நடத்தக் கூடும். நாம் ஒன்றுமில்லாதவர்களாய் இருந்தாலும் பெருமை நம்மை மிகப் பெரியவர்கள் என்று எண்ணச் செய்யும். எசேக்கியா ராஜா, ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதங்களை பாபிலோன் தேசத்து மக்களுக்குக் காண்பித்து, தான் ஒரு பெரியவன் என்று மற்றவர்களுக்கு முன்பாகத் தன்னை வெளிப்படுத்தப் பிரயாசப்பட்டான். எத்தனை வேளைகளில் நாமும் மற்றவர்களுக்கு முன்பாக நாம் மிகப் பெரியவர்கள் என்று காட்டும்படியாகச் செயல்படுகிறோம். ஆனால் வேதம் சொல்லுகிறது, அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கின்றது என்று. அவ்விதமான மக்களில் தேவன் தம்முடையக் கிருபையை நீக்கிவிடுவார். ஆகவே நாம் தாழ்மையுள்ளவர்களாய் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.