ஜூன் 6
“நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்” (லூக்கா 5:32).
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் நீதிமான்களை இன்னும் அதிக நீதிமான்களாக்கவோ அல்லது நீதிமான்களை மீட்கவோ வரவில்லை. பாவிகளையே அவர் மீட்கும்படியாக வந்தார். அவர் பாவிகளின் நேசர். இது நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையே கொடுப்பதாக இருக்கிறது. மெய்யாலும் இது ஒரு பாவிக்கு உலகத்தில் வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக இருக்கிறது. “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (லூக்கா 5:31) என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் பாவிகள் என்பதுதான் உண்மை. ஏனென்று கேட்டால் ஆதாமின் மூலமாக பாவமும், பாவத்தின் விளைவாக ஆக்கினையும் இந்த உலகத்தில் வந்தது. ஆகவே இந்த உலகத்தில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் பாவத்தன்மையுள்ளவர்கள். நாம் ஆக்கினை தீர்ப்புக்கு உரியவர்களாக இருக்கிறோம். இது வேதம் சொல்லும் தெளிவான உண்மை.
ஒரு மனிதனும் தன்னுடைய சொந்த முயற்சியினாலேயே அல்லது நீதியினாலோ தப்ப முடியாது. இதற்கு ஒரே வழி ஆண்டவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. ஒரு பாவிக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் செய்யப்பட்ட கிருபாதார பலியானது, அவனை பாவத்தினின்றும் பாவத்தின் ஆக்கினையிலிருந்தும் மீட்டு கிறிஸ்துவின் மூலமாக நீதிமான்களாக மாற்றப்படுகிறார்கள். அதனை நாம் அலட்சியப்படுத்தும் பொழுது, தேவனுடைய இந்த மகத்துவமான கிருபை எனக்கு தேவையில்லை என்று சொல்லுகிறோம். அது மட்டுமல்ல ஆண்டவர் இல்லாமல் என்னால் பரலோகம் போகமுடியும் என்று நினைக்கிறவர்களாகக் காணப்படுவோம். இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய வார்த்தையை நாம் தாழ்மையாய் விசுவாசித்து அதன்படி வாழவேண்டும். நாம் பாவி என்பதை ஒப்புக்கொள்வோம், மேலோட்டமாக அல்ல, உள்ளான இருதயத்தில் உணருவோம். தேவன் நம்மை இரட்சிக்க வல்லவராக இருக்கிறார்.