“எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்” (1 கொரிந்தியர் 6:12).

பவுல் தனக்கு இருந்த ஆவிக்குரிய சுதந்திரத்தைத் தவறாக உபயோகிக்க விரும்பவில்லை. தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் செய்யும்படியான காரியங்களானது தகுதியானதா? ஆண்டவருடைய பிள்ளை என்று அடையாளம் காட்டக்கூடிய ஒன்றாய் இந்தக் காரியம் இருக்கின்றதா என்பதைக் குறித்து சிந்திப்பது மிக அவசியம். அநேகர் தாங்கள் விரும்புகிற காரியங்களைச் செய்ய தங்களுக்குச் சுதந்திரம் உண்டு என்று எண்ணிச் செயல்படுகிறார்கள். ஆனால் மெய் கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நான் இதைச் செய்வது ஆண்டவருடைய நாமத்திற்கு ஏற்றதாக தகுதியாக இருக்குமா என்பதை நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டியதாய் இருக்கிறது. மேலும் பவுல் எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன் என்று சொல்லுகிறார். ஆண்டவருக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்குமானால் அதற்கு நாம் அடிமைப்படக் கூடாது. தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தாலும் அவருக்கு ஏற்புடையதல்லாத காரியங்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் வாழ வாய்ப்புண்டு. அதைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உங்களுடைய உள்ளத்தில், உங்களுடைய அடிமைத்தனம் என்ன என்பதைக் குறித்து சிந்திக்கும்படியாக உதவிசெய்வார். தேவன் தாமே அவருடைய மகிமைக்காக வாழ நமக்கு உதவிச் செய்வாராக.