ஆகஸ்ட் 9        

“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்” (ஏசாயா 54:17)

ஒரு  கிறிஸ்தவனுக்கு எதிராக எத்தனை ஆயுதங்கள் எழும்புகின்றன! சாத்தான் எப்போதும் யுத்தம் செய்கிறவனாய்க் காணப்படுகிறான். அநேக சமயங்களில் மனிதர்களைக்கொண்டு அவ்விதம் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக பல காரியங்களை உருவாக்குகிறான். மனிதர்கள் முகாந்திரமில்லாமல் பகைக்கிறார்கள். காரணமில்லாமல் பொல்லாத திட்டங்களைத் தீட்டி எப்படியாகிலும் தேவனுடைய பிள்ளையை ஒழித்துவிட செயல்படுகிறார்கள். ஆனால் அவருடைய மக்களுக்கு அவர் அருளும் பாதுகாப்பை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் விசுவாசிக்கும் தேவன் யார் என்பதையும், அவர்களுக்காக அவர் வைராக்கியமுள்ளவராயிருக்கிறார் என்பதையும், அவரே சர்வ வல்லவர் என்பதையும், அவருடைய தீர்மானமில்லாமல் யாரும் இவ்விதம் செயல்பட முடியாது என்பதையும் அறியாதிருக்கிறார்கள்.

உன்னுடைய போராட்டம் எதுவாக இருந்தாலும், எப்படிப்பட்டதாயிருந்தாலும் நீ பயப்படாதே. தேவன் உன் பட்சத்திலிருக்கிறார் என்பதை மறவாதே. இந்த உலகத்தில் எந்த மனிதன் இவ்விதம் வாக்குக்கொடுக்கமுடியும்? ஒரு மனிதனாலும் முடியாது. தேவாதி தேவனால் மாத்திரமே முடியும். அவரே உனக்கு இவ்விதம் சொல்லுவாரானால் இதைவிட மேலானது உனக்கு என்ன வேண்டும்?

“உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.” (உபா 28:7) தேவன் சொன்னவிதமாகவே செய்வார் என்பதை வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது. அது மாத்திரமல்ல தேவன் இன்னுமாக “உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னப்பபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின் மேலெல்லாம் வரப்பண்ணுவார்(உபா 11:25 ) தேவன் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?