அக்டோபர் 16
“நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” (மத்தேயு 8:20).
நம்மால், ஆவிக்குரிய அநேகக் காரியங்களை முழுமையாய் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. பாவத்தினால் கறைப்பட்ட மனிதனால், விழுந்துப்போன மனிதனுக்குரிய தன்மையினால், உன்னத தேவனுடைய அநேக செயல்களை விளங்கிக்கொள்ளமுடிவதில்லை. அதில் ஒன்று தேவனுடைய அன்பு; மன்னிக்கும் அன்பு, தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. ஒரு பாவியை இந்த அளவு தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும் நேசிப்பது என்பது எப்படி முடிந்தது? இந்த அன்பினிமித்தம் தேவ குமாரனாகிய அவர் பரலோகத்தின் மேன்மையை விட்டு நீசமான பாதையை இந்த பூமியில் எப்படித் தெரிந்து கொள்ளமுடிந்தது?
தேவன், இரட்சிப்பை நிறைவேற்றுபடியாக தன்னை முற்றிலும் தாழ்த்த வேண்டியிருந்தது. “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைதாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:6- 8) ஓ ! தேவாதி தேவன் அடிமையாக வேண்டியிருந்தது! இந்த உலகில் ஏழையாய், வறியவராய் தன்னைத் தாழ்த்தவேண்டியிருந்தது ! “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.” (2 கொரிந்தியர் 8:9)
அன்பானவர்களே! கிறிஸ்துவின் இவ்விதமான அன்பு நம்மை ஆழமாய்த் தொடவில்லையென்றால் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது எப்படி சரி என்று எண்ணுகிறீர்கள்? பவுல் “கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது” என்று சொல்லுகிறார் “மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.” இந்த உலகம் அவருடையது. அவரே சகலத்தையும் உண்டாக்கினவர். அவர் இந்த உலகத்தில் அந்நியராய் வாழ்ந்தார். தாழ்மையின் பாதையைத் தெரிந்துகொண்டார். நீ இந்த அன்புக்கு என்ன பதில் சொல்லுகிறாய்?