ஜூலை 25                      

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும்  உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை(யோசுவா 1 :5)

    மோசேக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி யோசுவாவை நியமித்தார். யோசுவா வயதில் இளையவன், மோசேயைபோல அனுபவம் பெற்றவனல்ல வழிநடத்தப்பட வேண்டிய மக்களோ முரட்டாட்டமுள்ள மக்கள், வணங்கா கழுத்துள்ள ஜனங்கள். ஆனால் இவ்விதமான எதிரிடையான இந்த சூழ்நிலையில் தான், தேவன் இவ்விதம் சொல்லுகிறார். தேவன் ஒரு மனிதனை தம் பணிக்கு அழைக்கும்போது அந்த மனிதனின் பெலத்தை சார்ந்து தேவன் அழைக்கிறவரல்ல. தேவன் உன்னுடைய வாழ்க்கையில் உனக்கென்று நியமிக்கும் பணியில், நீ உன்னுடைய பெலத்தைச் சார்ந்தே செயல்படும்படியாக தேவன் எதிர்பார்ப்பவரல்லை. அவருடைய பெலத்தைச் சார்ந்தே அவர் அழைக்கிறார். நீ தேவையான நேரத்தில் உன்னை அழைத்த தேவனுடைய பெலத்தைச் சார்ந்து கொள்ளத் தவறிவிடுகிறாய். ஆனால் அது இன்னும் அதிகமாக உன்னைச் சோர்வில் நடத்திச் செல்லுகிறது. நீ தேவனை இன்னும் உறுதியாகப் பற்றிக்கொள்.

     மேலும் இந்த வாக்குத்தத்தத்தில் ‘நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்’ என்று தேவன் சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையின் கடைசி நிமிடம், கடைசி வினாடி மட்டும் என்று சொல்லுகிறார். இவ்விதமாய் தேவன் யோசுவாவுக்கு மாத்திரமல்ல உனக்கும் செய்வார் என்று நம்புகிறாயா? இன்றைய நவீன உலகத்தில் மனிதன் பாதுகாப்பின்மையை அதிகம் உணருகிறான், அநேக அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்பிற்காக எத்தனையோ திட்டங்கள் தீட்டுகிறார்கள், சட்டமியற்றுகிறார்கள், பாதுகாவலர்களையும், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் தேவன் அப்படியல்ல, அவர் தம்முடைய சர்வ வல்லமையினால் உன்னை பாதுகாக்கிறார். ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியாது.